பெங்களூரில் வீடுகளுக்கு பார்க்கிங் கட்டணம்… நிர்ணயம்! மாநகராட்சியின் முடிவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவி தொகை; அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்; 200 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்தினால் இலவச மின்சாரம்; அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ இலவச அரிசி; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 உதவி தொகை என்று, ஐந்து கவர்ச்சிகரமான வாக்குறுதி திட்டங்களை அளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.

இந்த ஐந்து வாக்குறுதி திட்டங்களையும் நம்பி, காங்கிரசை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களுக்கு, விலைவாசி உயர்வு என்ற பெயரில், தினமும் சம்மட்டி அடி தான் கிடைக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மூன்று முறை பால் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

பஸ், மெட்ரோ ரயில் கட்டணமும் உயர்ந்தது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் கட்டணத்தையும், உயர்த்தி கொண்டே செல்கின்றனர்.

ஆண்டுக்கு ரூ.600



இந்நிலையில், சொத்து வரியுடன் குப்பை கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுதவிர, மின் கட்டணத்தில், 1 யூனிட்டிற்கு கூடுதலாக 36 பைசா உயர்வும் நேற்றில் இருந்து அமலானது. தவிர, மத்திய அரசின் சுங்க கட்டண உயர்வும் நேற்று அமலுக்கு வந்தது.

நேற்று ஒரே நாளில் மக்களுக்கு மூன்று ஷாக் கிடைத்த நிலையில், பெங்களூரு மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்து உள்ளது. பெங்களூரில் குடியிருப்பு, வணிக கட்டடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, மாநகராட்சி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, 150 சதுர அடியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு, 1 சதுர அடிக்கு ரூ.2 வீதம் 10 மாதங்களுக்கு 600 ரூபாய் வசூலிக்கவும்; வணிக கட்டடம் மற்றும் குடியிருப்பு அல்லாத இடங்களில் 150 சதுர அடிக்கு, 1 சதுர அடிக்கு ரூ.3 வீதம் 10 மாதங்களுக்கு 1,125 ரூபாய் வசூலிக்கவும் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால், ஏழு நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

சத்தமின்றி உயர்வு



குடியிருப்பு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த, முன்பு கட்டணம் எதுவும் இல்லை. ஆனால் கார்கள் நிறுத்தப்பட்டால் அதற்கு உரிய கட்டணத்தை, உரிமையாளர்கள் வசூலித்து வந்தனர். ஆனால், மால்களில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, ஒரு சதுர அடிக்கு 8 ரூபாய் வரை மாநகராட்சி வசூலித்து உள்ளது. தற்போது 8 ரூபாயை 3 ரூபாயாக குறைத்து உள்ளனர். அந்த இழப்பை ஈடுகட்ட குடியிருப்பு பகுதிகளுக்கும், கட்டணம் வசூலிக்க உள்ளனர்.

மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்களிடம் இருந்து, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வாக்குறுதி திட்டங்கள் என்ற பெயரில் ஒரு கையில் பணத்தை கொடுத்து விட்டு, இன்னொரு கையில் பறிக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக, கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையில் மின் துறை சத்தமே இல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் லிப்ட் ஆய்வு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. முன்பு லிப்ட் ஆய்வு மற்றும் புதுப்பித்தல் கட்டணம் 800 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை இருந்தது.

தற்போது 5,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை உயர்த்தி உள்ளனர். வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் 25 கே.வி., டிரான்ஸ்பார்மரை ஆய்வு மற்றும் புதுப்பிக்க முன்பு 1,300 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை இருந்தது. தற்போது 3,000 ரூபாய் முதல் 5,000 வரை உயர்ந்து உள்ளது.

Advertisement