கூடலுார் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது; சுருங்கிய தெருக்களால் வாகன ஓட்டிகள் அவதி

கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் மையப் பகுதியில் கூடலழகிய பெருமாள் கோயிலுக்கு தேர் செல்லும் நான்கு ரத வீதிகள் உள்ளன. அண்ணா நகர், காந்திகிராமம், கரிமேட்டுப் பட்டி, ராஜீவ் காந்தி நகர், சுக்காங்கல்பட்டி, எம்.ஜி.ஆர். காலனி, பழைய பஸ் ஸ்டாண்ட், கன்னிகாளிபுரம், கருணாநிதி காலனி என மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலையில் இருந்து இப்பகுதிகளுக்குச் செல்ல லாரி, பஸ் செல்லும் வகையில் ரோடு வசதி இருந்தது. மேலும் குறுக்குத் தெருவிலும் மினிலாரி, வேன் என சென்று வந்தன.

சுருங்கியது



லாரி, பஸ் சென்று வந்த தெருக்கள் தற்போது சிறிய வேன் கூட செல்ல முடியாத வகையில் உள்ளது. நகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீடு, கடைகள், படிகள் என கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால் 12 அடி அகலம் உள்ள பல தெருக்கள் தற்போது 5 அடியாக சுருங்கியுள்ளது. தெருக்களில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தும்போது மற்ற வாகனங்களும் கடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட தெருக்களில் செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

தயக்கம்



2004ல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி, 2010க்கு பின் இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பின் இதுவரை தெருக்களில் அளவீடு செய்யவில்லை. பல மாதங்களாக டவுன் பிளானிங் இன்ஸ்பெக்டர் இல்லாததால் இப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தெருக்களில் படிகள் நீண்டு நடந்து செல்ல முடியாத வகையில் உள்ளது. அலுவலர் இன்றி தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் நகராட்சி நிர்வாகம் தயங்குகிறது.கள ஆய்வு செய்து பாரபட்சமின்றி அனைத்து தெருக்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கண்டுகொள்ளாத நகராட்சி



புதியதாக வீடு கட்டுபவர்கள் நகராட்சியில் பிளான் அப்ரூவல் பெற்று கட்ட வேண்டும். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பின் அனுமதி தர வேண்டும். ஆனால் அது பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். மண்டல உயர் அதிகாரிகள் இதனை நேரில் ஆய்வு செய்து நகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இன்னும் சில மாதங்களில் தெருக்கள் சுருங்கி நடைபாதையாக ஆகிவிடும்.

Advertisement