செக் போஸ்ட்

* ஏன் ஓரவஞ்சனை?

எஸ்.டி., சமுதாயத்துக்கு நகராட்சி தேர்தலில் ஆண்டர்சன் பேட்டை வார்டு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதில் சத்ரபதி பெயருக்குரியவர் வெற்றி பெற்றார். அவர் கவுன்சிலராகவே நீடிக்கிறார். இதில் நோ டவுட்.

ஆனால், பட்ஜெட் புத்தகத்தில் 34 வார்டுகளின் கவுன்சிலர் பெயரும் படமும் இடம் பெற செய்திருக்கிறார்கள். ஆனால் ஆண்டர்சன் பேட்டை கவுன்சிலர் பெயரோ படமோ இடம் பெறவில்லை. இதில் என்ன உள்நோக்கமோ. ஏன் ஓர வஞ்சனையோ.

நியமன உறுப்பினர்கள் ஐந்து பேரின் படங்களும் இடம் பெறும்போது, இவர் ஒருத்தர் படம் மட்டும் இடம் பெறாமல் இருட்டடிப்புச் செய்யலாமா. இது எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்துக்கு எதிரான நடவடிக்கை இல்லையா. இதுக்கு காரணமான ஆபீசரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்ய போகுதோ. இதுகுறித்து ஸ்டேட் அரசுக்கு புகார்கள் பறந்திருக்குது.

***

* சிலையில் விரிசல்!

சட்டப் பிதா ஜெயந்தியை முன்னிட்டு அவரின் சிலைகளுக்கு முனிசி., நிர்வாகம் பெயின்ட் பூசும் வேலையை செய்திட்டாங்க. ஆனால், முனிசி., வளாகத்தில் உள்ள சிமென்ட் சிலை விரிசலாக இருப்பதை பெயின்ட் பூசுவோர் விரிசலை மறைக்க 'மேக்கப்' வேலையை செய்திருக்காங்க. அது எந்த நேரத்தில் விழப் போகுதோ. பாதிப்பு வந்த பிறகு செய்வதை விட எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாமே.

***

* அசல் - போலி எது?

ப. பேட்டை கைக்கார அசெம்பிளிக்காரர் பேரில், சட்டசபைத் தேர்தலுக்கு முன் நிலம், மனை, ஆக்கிரமிப்பு செய்ததாக பூக்காரங்க பலமாக புகார்கள் செய்தாங்க. அதில் ஏரியை காணோம்னு கூட பரபரப்பை ஏற்படுத்தினாங்க. அது கிணற்றில் விழுந்த கல்லாக கிடக்குது.

ஆனால், புது தகவலாக அவரோட மகன், 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கினாராம். அந்த நிலத்தில் சிலர் தில்லாலங்கடி வேலை செய்து ஆக்கிரமிக்க கொட்டகைகள் அமைத்தாங்களாம்.

இதை விடுவாரா பலே கில்லாடி. கோர்ட்டுக்கு போய் இடைக்கால தடை உத்தரவை வாங்கிட்டாரு. அந்த திடீர் கொட்டைகளையும் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்ற செய்திட்டாரு. நிஜத்தில் அது யாருக்கு சொந்தம்னு கோர்ட் முடிவு செய்ற வரைக்கும் காத்திருக்க போறாங்களாம்.

யாருடைய ஆவணங்கள் அசல் என்பது தெரியதான் போகுது. போலி ஆவணங்கள் தயாரிக்கிற கும்பல் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்கிறாங்க. இதுவொன்னும் கேட்பாரற்ற ஏரி நிலம் இல்லை. விளை நிலம்னு அழுத்தமா சொல்றாங்க. போலிகளுக்கு வேலிகள் தேவையா.

***

* ஓடாதே உட்கார்!

முனிசி., கேப்டன் பதவியில் இருந்தவர். பதவி காலம் முடிந்தவுடன் மீண்டும் அதே பதவியை எதிர்ப்பார்த்தவருக்கு அதிகாரம் உள்ள கைகாரங்க, 'நோ சான்ஸ்' என்று மூக்குடைப்பு செய்தாங்க.

இதனால், அவர் தான், எங்கும் எதிலும் ஊழல்னு நிர்வாக செயல்பாட்டின் அநியாயத்தை நொறுக்கினாரு. இடம் மாறி ஓடப்போறாருன்னு பத்த வெச்சாங்க.

அவரை, விலகி ஓடாதே, இந்தா உட்காருன்னு காலியாக இருந்த ஸ்டேண்டிங் கமிட்டி தலைவர் நாற்காலி பதவியில் அமர வெச்சிட்டாங்க. இப்போ ஊழல், புனித மாயிடுமான்னு முனிசி., வட்டாரம் கேட்குது. பதில் சொல்லதான் யாருமில்ல!

***

Advertisement