மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தால் 'சீட்' மறுக்க தி.மு.க., தலைமை முடிவு

12

தி.மு.க.,வில், மூன்று முறைக்கு மேலாக எம்.எல்.ஏ., பதவி வகிப்பவர்களில், யார் யாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாம் என்பது குறித்து, தேர்தல் வியூக வகுப்பு நிறுவனம், அக்கட்சி தலைமைக்கு ஆலோசனை வழங்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.


தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,வில் சட்ட சபை தேர்தல் பணிகளை திட்டமிட, மூன்று வியூக வகுப்பு நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளன. மேலும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றும் தனியாக செயல்படுகிறது.


கடந்த 2021, சட்டசபை தேர்தலில், 173 பேர், தி.மு.க., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள், மூத்த எம்.எல்.ஏ.,க்கள், மூத்த மாவட்ட செயலர்கள் என்ற அடிப்படையில், பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஐந்தாறு முறை எம்.எல்.ஏ., பதவி வகித்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.


பெரிய அளவில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்பதால், எதிர்பார்த்துக் காத்திருந்த பலரும் அதிருப்தி அடைந்தனர். சில தொகுதிகளில் சரியாக வேட்பாளர் தேர்வு நடக்கவில்லை என்பதாலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதாலும், நிர்வாகிகள் சிலர் கோபத்தில் இருந்தனர். இதையடுத்து, பல தொகுதிகளில் உள்ளடி வேலையும் நடந்தது.


இதனால் போட்டியிட்ட 173 பேரில், 133 பேர் வெற்றி பெற்றனர். அதாவது, 40 பேர் தோல்வி அடைந்தனர். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், இதுபோன்ற தவறுகள் நடந்து விடக்கூடாது என்பதில், முதல்வர் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார்.


தேர்தல் வியூக நிறுவனங்கள் தரும் பட்டியலை, உளவுத்துறை தரும் பட்டியலுடன் ஒப்பிட்டு, வேட்பாளர்களை தேர்வு செய்ய, அவர் திட்டமிட்டுள்ளார். நேர்காணல் வாயிலாக, தன்னுடைய நேரடி பார்வையில் வேட்பாளர்களை தேர்வு செய்யவும் முதல்வர் முடிவு செய்துள்ளார். அதற்காக, பத்து முறை, எட்டு முறை, ஐந்தாறு முறை, மூன்று முறை எம்.எல்.ஏ., பதவி வகித்தவர்கள் யார் யார் என்ற விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதில், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் என, 30க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.


அவர்களின் பணபலம், ஜாதி பலம், தொகுதியில் உள்ள நற்பெயர், மக்கள் நலப்பணி, வெற்றி வாய்ப்பு குறித்து, 'சர்வே' எடுக்கப்பட உள்ளது. அதில் தேர்வாகும் நபர்களுக்கே மீண்டும் 'சீட்' வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை, மூத்த அமைச்சராக இருந்தபோதிலும், 'சர்வே' முடிவில் தேர்வாகவில்லை எனில், அவரது மகள் அல்லது மகனுக்கு, 'சீட்' கொடுத்து, அவரை சம்மதிக்க வைக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

Advertisement