தலைவர் பதவி வேண்டுமா, வேண்டாமா... உங்கள் சாய்ஸ்: அண்ணாமலையை முடிவெடுக்க சொல்கிறார் அமித் ஷா

67

'சட்டசபை தேர்தலில் கூட்டணி, தொகுதி பங்கீடு உட்பட அனைத்து முடிவுகளையும் மேலிட முடிவுக்கு விட்டுவிட வேண்டும். அதற்கு சம்மதித்தால் மட்டுமே, தலைவர் பதவிக்கு நீங்கள் போட்டியிடலாம். விருப்பம் இல்லை எனில், தலைவர் பதவிக்கு மேலிடம் சொல்லும் நபருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.


அதே நேரம், 'அண்ணாமலை தலைவராக தொடர்ந்தால் தான், தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு எதிர்காலம். இல்லையெனில், கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும். அதனால், அவரை எக்காரணம் கொண்டு தலைவர் பதவியில் இருந்து மாற்றக்கூடாது,' என, தமிழக பா.ஜ.,வில் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.


இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த, 2021 ஜூலையில் தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். அவர், மாவட்ட வாரியாக சுற்று பயணம் செய்து, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இருந்தாலும், அந்தாண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிடுவதாக, அண்ணாமலை தைரியமாக அறிவித்தார்.


தனித்து போட்டியிட்ட பா.ஜ., பெரும்பாலான மாநாகராட்சி, நகராட்சிகளில் இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்தது. சென்னை மாநகராட்சியிலும் ஒரு வார்டை கைப்பற்றியது. ஆளும்கட்சியான தி.மு.க., அமைச்சர்களின் ஊழல்களை, பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க.,வே விமர்சிக்க அச்சப்பட்ட நிலையில், அண்ணாமலை தைரியமாக விமர்சித்தார். ஆதாரங்களுடன் தமிழக அரசின் ஊழல்களை பொதுவெளியில் வெளியிட்டு பேசினார். தி.மு.க., மற்றும் அரசின் தவறுகளை தன்னுடைய அறிக்கை வாயிலாக தினமும் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்.


கடந்த, 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., விலகியது. அதற்கு, கட்சியின் மூத்த முன்னோடிகளை அண்ணாமலை தாறுமாறாக விமர்சித்தார் என அ.தி.மு.க., தரப்பில் காரணம் சொல்லப்பட்டது. இருந்தபோதும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை தொடர விரும்பிய பா.ஜ., தலைமை, தூதர்கள் வாயிலாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடமே பேசினர். ஆனால், முடிவில் உறுதியாக இருப்பதாகச் சொல்லி, லோக்சபா தேர்தலை தே.மு.தி.க.,வை மட்டும் இணைத்துக் கொண்டு தைரியமாக சந்தித்தார் பழனிசாமி.


வேறு வழியின்றி, பா.ம.க.,வையும் இணைத்துக் கொண்டு, பா.ஜ.,வும் லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது. இருகட்சிகளும் தோல்வியைத் தழுவின. ஆனால், பா.ஜ., கூட்டணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 18 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது. அதில், பா.ஜ., மட்டும் 12 சதவீத ஓட்டுகளைப் பெற்றது. கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை, 4 லட்சம் ஓட்டுகள் பெற்றார். பல தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட அ.தி.மு.க., சில தொகுதிகளில் டிபாசிட்டையும் பறிகொடுத்தது. கூடவே, ஓட்டு சதவீதத்திலும் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், அடுத்து வந்த சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது.


இந்நிலையில், வரும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியாக இருப்பதுடன், கூட்டணி கட்சிகளின் பலமும் தி.மு.க.,வுக்கு உள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் இடையில் போட்டி இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவது, தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது. எனவே, தி.மு.க.,வை எதிர்கொள்ள பலம் வாய்ந்த கூட்டணி அமைக்க, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது.


இதற்காக, அ.தி.மு.க.,வை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் டில்லியில் அமித் ஷாவை பழனிசாமி சந்தித்து பேசியதும், அமித் ஷாவின் கருத்தும் கூட்டணி பேச்சை உறுதிப்படுத்தியது.


'கூட்டணியில் சேர, அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என்று, அ.தி.மு.க., தரப்பில் நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதை, பா.ஜ., மேலிடம் ஏற்கவில்லை. 'அண்ணாமலை தலைவராக தொடர்ந்தால், தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரம் போன்றவற்றில் பிரச்னைகள் வரும்; அண்ணாமலையை மாற்றியே தீர வேண்டும்' என்று, அ.தி.மு.க., தரப்பில் கூறப்படுகிறது.


இந்த விபரங்களை, அண்ணாமலையிடம் மேலிட தலைவர்கள் தெரிவித்தனர். அவர், 'கட்சி நலனே முக்கியம்; தலைமை என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு கட்டுப்பட்டு செயல்படுவேன்' என, தெரிவித்துள்ளார். இந்த சூழலில், வரும், 8, 9, 10 தேதிகளில், தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலை நடத்த மேலிட பார்வையாளராக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, சென்னை வருகிறார்.


அண்ணாமலையிடம், 'தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தாங்களே தொடரலாம். ஆனால், சட்டசபை தேர்தலில் கூட்டணி, தொகுதி பங்கீடு உட்பட அனைத்து முடிவுகளையும் மேலிடத்திடம் விட்டுவிட வேண்டும். இதற்கு விருப்பம் இல்லை எனில், தலைவர் பதவிக்கு போட்டியில் மேலிடம் தெரிவிக்கும் நபருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என, பா.ஜ., மேலிட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


தமிழக பா.ஜ.,வுக்கு யார் வேண்டுமானாலும் தலைவராக இருக்கலாம். ஆனால், அண்ணாமலை இல்லாத தமிழக பா.ஜ.,வின் எதிர்காலம் கேள்விக்குறிதான். இது தலைமைக்கும் நன் கு தெரியும். ஆனாலும், கூட்டணிக்காக அண்ணாமலையை காவு கொடுக்கும் சூழல் உருவாகி விட்டது. என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


குழிபறிக்கும் தலைவர்கள்!



தமிழக பா.ஜ.,வின் முக்கியத் தலைவர்களாக இருக்கும் பெரும்பாலானோர், அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டபின், அவருடைய செயல்பாடுகளுக்கு துளி கூட ஒத்துழைக்காமல் இருந்தனர். இதனால், தனித்தே செயல்படுவது என முடிவெடுத்து, அதிரடியாக செயல்பட்டார் அண்ணாமலை. இதையடுத்து, அவரை எப்படியாவது தலைவர் பதவியில் இருந்து இறக்கி விட வேண்டும் என, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் டில்லிக்குச் சென்று, தலைமையிடம் புகார் அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

தற்போது, தலைமையும் அண்ணாமலை மீது லேசான அதிருப்தியில் இருக்கிறது என்பதை அறிந்து, சமீபத்தில் டில்லி சென்ற தலைவர்கள், அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்களைச் சொல்லி, எப்படியாவது அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, தமிழக பா.ஜ.,வை காப்பாற்றுங்கள் என சொன்னதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.



வதந்தி பரப்பும் எதிர்ப்பாளர்கள்



இதற்கிடையே, அண்ணாமலையின் எதிர்ப்பாளர்கள், 'தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுகிறார்' என்று, வதந்தி பரப்பி வருகின்றனர். இது, தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'முதல்முறையாக பா.ஜ.,வின் கொள்கை எதிரியான தி.மு.க.,வை தைரியமாக விமர்சித்தது அண்ணாமாலை தான்; அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்றக்கூடாது. அண்ணாமலையை நீக்கினால், கட்சியில் இருந்து பலரும் வெளியேறுவோம். பா.ஜ.,வின் வளர்ச்சி அதலபாதாளத்திற்கு சென்று விடும். அண்ணாமலையை மாநில தலைவராக தொடர அனுமதிக்க வேண்டும்' என்று, தேசிய தலைவர்களின் சமூக வலைதள பக்கங்களில், தமிழக பா.ஜ.,வினர் பதிவிட்டு வருகின்றனர்.



-நமது நிருபர்-

Advertisement