சிட்டி கிரைம் செய்திகள்
வாலிபரை தாக்கியவர்கள் கைது
செங்காளிபாளையம், காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி, 19. ஒரு மாதத்திற்கு முன் சிரஞ்சீவி தனது நண்பர்களுடன் மது அருந்த சென்ற போது, அரவிந்தகுமார், 26, ஸ்ரீதர், 22 ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 30ம் தேதி சிரஞ்சீவி செங்காளிபாளையம் அருகில் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த அரவிந்தகுமார் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர், அவரிடம் தகராறு செய்து தாக்கினர். தடுக்க வந்த சிரஞ்சீவியின் தந்தை மற்றும் தங்கையையும் தாக்கியுள்ளனர். சம்பவம் குறித்து சிரஞ்சீவி அளித்த புகாரில் துடியலுார் போலீசார் அரவிந்தகுமார், ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் அருண்குமார், 31; துடியலுார் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம், காலை பணியில் இருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அருண் குமாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல் வேலை வாங்கியதால்தான், அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக, அருண் குமாரின் தந்தை வெள்ளியங்கிரி, துடியலுார் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அருண் குமார் பணியாற்றிய நிறுவனத்தின் மேற்பார்வையாளர் மற்றும் மேலாளர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சூதாட்டம் ; 9 பேர் கைது
சித்தாபுதுார், வி.கே.கே.மேனன் ரோடு பகுதியில், சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காட்டூர் போலீசார் வி.கே.கே.மேனன் ரோடு, பி.கே.ஆர்.வீதியில் உள்ள காலி இடத்தில் சோதனை செய்த போது, சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்தனர்.
சீட்டாட்டத்தில் ஈடுபட்ட சித்தாபுதுாரை சேர்ந்த சக்திவேலன், 47, பிரேம் குமார், 39, கணபதியை சேர்ந்த ஹரிதாஸ், 64, ரத்தினபுரியை சேர்ந்த சந்திரசேகரன், 49, மாணிக்கவேல், 54, பி.என்.பாளையத்தை சேர்ந்த செந்தில் குமார், 47, ராம சுப்ரமணியன், 39, பேரூரை சேர்ந்த சரவணன், 59, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சதீஷ் குமார், 46 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு, ரூ.32,540 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.