பணம் பறிக்கும் வெளி மாநில போலீஸ்; ஆண்டர்சன்பேட்டை வியாபாரிகள் மறியல்

தங்கவயல் : வெளிமாநில போலீசாரை கண்டித்து ஆண்டர்சன் பேட்டை வியாபாரிகள் நேற்று சாலை மறியல் செய்தனர்.
ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் கர்நாடகாவின் ஆண்டர்சன் பேட்டை அமைந்துள்ளது. இதனால் இங்குள்ள வியாபாரிகளுக்கு வெளி மாநில போலீசாரால் தொல்லை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் ஜமீர் என்ற சில்லரைக்கடை வியாபாரியை வெளிமாநில போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அழைத்துச் சென்றது எந்த மாநில போலீசார் என்பது யாருக்கும் தெரிய வில்லை.
இதை கண்டித்து நேற்று ஆண்டர்சன்பேட்டை சதுக்கத்தில் வியாபாரிகள் சாலை மறியல் செய்தனர். இதுபற்றி அறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, அங்கு விரைந்து வந்தார். வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினார்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் எம்.எல்.ஏ., உறுதி அளித்தார். அதன் பின்னர் அரைமணி நேரமாக நடந்த மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அப்போது இந்த பிரச்னை குறித்து சில வியாபாரிகள் கூறியது:
குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிலரை அழைத்து வரும் வெளி மாநில போலீசார், இங்குள்ள வியாபாரிகளுக்கு வழக்கில் தொடர்பு இருப்பதாக மிரட்டுகின்றனர்.
திருட்டு நகைகளை இங்கே இருப்பவர்கள் வாங்கியதாக கூறி, விசாரணை என்ற பெயரில் வியாபாரிகளை அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் எங்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பது, அவர்களின் உறவினர்களுக்கு கூட தெரிவிப்பதில்லை.
அப்படி அழைத்துச் செல்லப்படும் வியாபாரிகளிடம் ஒரு லட்சம் கொடுத்தால் வழக்கு இல்லாமல் விடுவதாக பேரம் பேசுகின்றனர். இங்கே வியாபாரம் செய்ய முடியவில்லை. இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


மேலும்
-
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
ஓய்வு கிடைப்பதால் பீட் ஆபீசர்கள் நிம்மதி! ஷிப்ட் அடிப்படையில் போலீசாருக்கு பணி
-
செம்மொழி பூங்காவுக்குள் என்ன நடக்குது; நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
-
வாகனம் செல்வதில் பிரச்னை; பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்
-
கொங்குநாடு மருத்துவமனையில் சிறப்பு சலுகையில் அறுவை சிகிச்சை
-
சி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா