துாய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு பயனாளிகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு

கோவை : உக்கடம் சி.எம்.சி., காலனியில் கட்டியுள்ள, அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்க, ஆவணங்கள் சரிபார்க்கும் பணியை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் துவக்கியுள்ளது.

உக்கடம் சி.எம்.சி., காலனியில் இருந்த, 492 வீடுகளை இடித்து விட்டு, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அங்கு வசித்த குடும்பத்தினர், தற்காலிகமாக கழிவு நீர் பண்ணை வளாகத்தில், தகர கொட்டகையில் தங்க வைக்கப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாகி விட்டது. இதுவரை, 222 வீடுகள் மட்டும் கட்டப்பட்டிருக்கின்றன.

அவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தும் கூட, பயனாளிகளுக்கு இன்னும் ஒதுக்கவில்லை.

முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதும், கலெக்டரின் கவனத்துக்குச் சென் றது. பயனாளிகளை அடையாளம் காண்பதற்காக, ஆவணங்கள் சரிபார்க்கும் பணியை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் துவக்கியுள்ளனர்.

இப்பணி, கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நேற்று துவங்கியது; இன்றும் நடைபெறுகிறது. பயனாளியின் ஆதார் அட்டை, பயனாளியின் கணவர் மற்றும் மனைவி ஆதார் அட்டை, புகைப்படம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பயனாளர் இறந்திருந்தால் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று மற்றும் வாரிசுதாரர்களின் ஆதார் அட்டை நகல் சமர்ப்பிக்க, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:

சி.எம்.சி., காலனியில் வசித்த குடும்பத்தினர் இழந்த வீடுகளுக்கு, மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில், உண்மையான பயனாளிகளை ஒதுக்க முயற்சிக்கின்றனர்.

வாரிசு சான்று, இறப்பு சான்று போன்றவை தொழிலாளர்களிடம் இருக்க வாய்ப்பு குறைவு.

அதனால், இடிக்கப்பட்ட வீட்டுக்கு மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே ஆவணங்கள் பெறப்பட்டு, தகர கொட்டகையில் தங்க வைத்துள்ள தொழிலாளர்களுக்கே, வீடு கொடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக, கலெக்டரிடம் கேட்டபோது, ''உக்கடம் குடியிருப்பு ஒதுக்குவது தொடர்பாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினரிடம் ஆலோசிக்கப்படும். உண்மையான பயனாளிகள் பாதிக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement