கூட்டுறவு சங்கங்களுக்கு மானியம் விடுவிப்பு முழுமையாக வழங்க எதிர்பார்ப்பு
திருப்பூர், : தமிழகம் முழுவதும் கூட்டுறவு துறையின் கீழ், ரேஷன் கடை நடத்தும், கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய தொகை முன் தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், தற்போது ஒரு தவணை மானிய தொகையினை விடுவித்து அறிவித்துள்ளார். கடந்த 2021 - 22ம் ஆண்டுக்கான மானிய தொகை கேட்பு அடிப்படையில் மூன்றில் இரு பங்கு தொகை மானியமாக கடந்த ஜன., மாதம் விடுவிக்கப்பட்டது. அவ்வகையில், 443 கோடி ரூபாய் மானியத்தில், 225 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
தற்போது, நிதியாண்டு முடிவில், 2022 - 23ம் ஆண்டுக்கான மானியம் முன் விடுவிப்பாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வகையில், 53 கோடியே 72 லட்சத்து 23 ஆயிரத்து 297 ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு இணைப் பதிவாளர்கள் இதனை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிடமிருந்து பெற்று, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்க வேண்டும்.
ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
ஏறத்தாழ, 200 கோடி ரூபாய் மானியம் நிலுவையில் உள்ள நிலையில் அரசு, 52 கோடி ரூபாயை மட்டும் விடுவித்துள்ளது. ஆண்டுதோறும் முறையாக இதனை வழங்க வேண்டும். கடன் தள்ளுபடி, கூடுதல் கடன் வழங்க நிர்ப்பந்தம் என கூட்டுறவு சங்கங்கள் தடுமாறும் நிலையில், அரசு வழங்கும் மானியங்கள் முழுமையாக உரிய கால கட்டத்தில் வழங்கப்பட வேண்டும்.
தற்போது ரிசர்வ் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் பெற கூட்டுறவு சங்கங்கள் தகுதி பெற வேண்டுமானால், கடன் தள்ளுபடி மானியங்கள் முழுமையாகப் பெறப்பட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இதனால், உடனடியாக மாநில அரசு அந்த மானியத்தை விடுவித்தது. இதேபோல், இந்த மானியத்தையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.