சில வரி செய்திகள்...
விசைத்தறியாளர் உண்ணாவிரதம்
கடந்த 2022ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த கூலியிலிருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள், கடந்த, 19ம் மாதம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். 13ம் நாளாக நீடிக்கும் போராட்டத்தின் தீவிரத்தை மத்திய - மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என கூட்டு கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று (2ம் தேதி) கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அவிநாசி செங்காடு திடலில், ஒரு நாள் அடையாள கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
கால்நடை வரத்து குறைவு
திருப்பூர், கோவில் வழி அருகிலுள்ள அமராவதிபாளையத்தில் நேற்று முன்தினம் நடந்த கால்நடை சந்தைக்கு, குறைந்தளவு கேரள வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். மாடு வரத்து குறைவால் உள்ளூர் விவசாயிகள், பிற மாவட்ட வியாபாரிகள் வந்த போதும், விற்பனையும், விலையும் நேற்று களை கட்டவில்லை. வியாபாரிகள் வருகை இல்லாததால், கால்நடை விற்பனையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கன்றுகுட்டி, 2,500 - 3,000 ரூபாய், காளை, 24 ஆயிரம் - 27 ஆயிரம், எருமை, 23 ஆயிரம் - 27 ஆயிரம், மாடு, 25 ஆயிரம் - 31 ஆயிரம் ரூபாய் என கடந்த வாரத்தை விட விலை குறைந்திருந்தது. இந்த வாரம் மொத்தம், 1.05 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மகளிர் கல்லுாரி ஆண்டு விழா
திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பொருளியல் துறைத்தலைவர் செல்வி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் தலைமை வகித்தார். கோவை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் எழிலி பேசுகையில்,' பெரிய பதவியில் அமர வேண்டும் என நாம் எண்ணினால், அதற்கேற்ற படிப்பு நம் பெயரை உயர்த்தி பிடிக்க வேண்டும். முதலிடம் பெற வேண்டும் என்ற முயற்சியுடன் படிக்க வேண்டும்,' என அறிவுரை வழங்கினார். கல்லுாரி வளர்ச்சிக்குழு உறுப்பினர் லிட்டில்குரியா, விலங்கியல் துறைத்தலைவர் நளினி, வேதியியல் துறைத்தலைவர் பாஹிதா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.
விளக்கு அமைக்க வேண்டுகோள்
திருப்பூர் மாநகராட்சி, 30வது வார்டு கவுன்சிலர் புஷ்பலதா, மேயர் தினேஷ்குமாரிடம் நேற்று அளித்த மனுவில், 'அவிநாசி ரோடு புஷ்பா சந்திப்பு பகுதியில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நடை மேம்பாலத்தில் விளக்குகள் இல்லை. இதனால், மாலை 6:00 மணிக்கு மேல்யாரும் பயன்படுத்துவதில்லை. இரவு நேரங்களில், விஷமிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு நடை மேம்பாலத்தைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், நடை மேம்பாலத்தின் மீது விளக்குகள் அமைக்க வேண்டும்,' என வலியுறுத்தி உள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி, 30வது வார்டு கவுன்சிலர் புஷ்பலதா, மேயர் தினேஷ்குமாரிடம் நேற்று அளித்த மனுவில், 'அவிநாசி ரோடு - புஷ்பா சந்திப்பு பகுதியில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நடை மேம்பாலத்தில் விளக்குகள் இல்லை. இதனால், மாலை 6:00 மணிக்கு மேல்யாரும் பயன்படுத்துவதில்லை. இரவு நேரங்களில், விஷமிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு நடை மேம்பாலத்தைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், நடை மேம்பாலத்தின் மீது விளக்குகள் அமைக்க வேண்டும்,' என வலியுறுத்தி உள்ளார்.