விசைத்தறியாளர் போராட்டம் விவசாயிகள் சங்கம் ஆதரவு

திருப்பூர் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர் நடத்தும் உண்ணாவிரத போராட் டத்துக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

அதன் செயல் தலைவர் வெற்றி வெளியிட்டுள்ள அறிக்கை:

கொங்கு மண்டலத்தில் மிக முக்கிய தொழிலாக விசைத்தறி உள்ளது. விவசாய தொழில் நசிவடைந்த நிலையில், விவசாயிகள் பலர் மாற்று தொழிலாக விசைத்தறியை தேர்வு செய்தனர்.

அவ்வகையில், விசைத்தறி தொழிலில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். கோவை, திருப்பூர் கலெக்டர்கள் ஜவுளி உற்பத்தியாளர், நெசவாளர் உடன் கலந்து, மூன்றாண்டுக்கு ஒரு முறை விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு கூலி நிர்ணயிக்கின்றனர்.

சில ஆண்டுகளாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு முறையாக உயர்த்திய கூலி தரப்படுவதில்லை. மிகப்பெரும் நெருக்கடியை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர, விலைவாசி உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் சம்பள உயர்வு, உதிரி பாகம் விலை உயர்வு, வாடகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து நெருக்கடியில் உள்ளது.

இதுவரை பல கட்டமாக பேச்சு நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால், லட்சக்கணக்கான விசைத்தறியாளர்கள், தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு, தொழிலாளர் வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து கூலி உயர்வு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கோரிக்கையை வலியுறுத்தி அவிநாசியில், நாளை (இன்று) நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement