மாநில நெடுஞ்சாலை ஆணையம் வேண்டாம்...

திருப்பூர் : தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்த அரசாணையை எரிக்கும் போராட்டம் நடந்தது.

சாலைப்பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை, கோர்ட் உத்தரவுப்படி, பணிநாளாக ஏற்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும், அரசாணை, 140-ஐ ரத்து செய்ய வேண்டும்.

மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள, 210 சுங்கச்சாவடி அமைத்து, சுங்கவரி வசூல் கொள்ளை நடத்த அனுமதிக்க மாட்டோம். காலிப்பணியிடங்களை ஒழிக்காமல், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மக்கள் சேவை துறையாகிய நெடுஞ்சாலைத்துறையை காக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி சாலைப்பணியாளர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை மானியக்கோரிக்கை நாளான நேற்று, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்த அரசாணை எரிக்கும் போராட்டம் நடந்தது.

கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு, சங்க நிர்வாகிகள் வெங்கிடுபதி, கருப்பன், செவந்திலிங்கம், செங்கோட்டையன் தலைமை வகித்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், போராட்டத்தை விளக்கி பேசினர். தொடர்ந்து, அரசாணை நகலை எரிக்க முற்பட்டனர். அதனை போலீசார் பறித்து, சென்றனர்.

Advertisement