நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

7

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 01) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய போக்சோ




சிறுமி குளிப்பதை ரசித்தவர் கைது

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், குமாரவலசை சேர்ந்தவர் பொன்னுசாமி, 30; கட்டட தொழிலாளி; திருமணமானவர். இவர், சத்தியமங்கலத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி குளிப்பதை எட்டி பார்த்து ரசித்துள்ளார்.

இதை, தன் பெற்றோரிடம் சிறுமி கூற, போலீசில் புகார் செய்தனர். சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், பொன்னுசாமியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

16 வயது சிறுமிக்கு கொடுமை

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், வகுப்பில் அழுது கொண்டிருந்தார். ஆசிரியர் விசாரித்த போது, தனக்கு பாலியல் சீண்டல்கள் இருப்பதாக சிறுமி தெரிவித்தார். ஆசிரியர் சைல்டு லைனில் புகார் செய்தார். சைல்டு லைன் கண்காணிப்பாளர் கிருஷ்ணவேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிறுமியிடம் விசாரித்தனர்.

சிறுமி தாயுடன் வசிப்பதும், தந்தை துபாயில் வேலை செய்வதும் தெரியவந்தது. கோவை தனியார் கல்லுாரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படிக்கும் வாலாந்தரவையைச் சேர்ந்த நவீன், 21, என்பவருடன் சிறுமி தாய்க்கு தொடர்பு இருந்துள்ளது.

தாய் ஒத்துழைப்புடன் நவீன் சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். சிறுமி வீடு அருகிலுள்ள ஆசிரியையிடம் டியூஷன் படிக்க சென்ற போது ஆசிரியை மகன் பரத், 19, என்பவரும் சிறுமியை சீண்டியது தெரியவந்தது.

சிறுமி தாய், நவீன், பரத் மீது போக்சோ வழக்கு பதிந்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.




வனத்தில் பதுங்கிய தாத்தா
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை சேர்ந்த, 13 வயது சிறுமியை, 55 வயது தாத்தா முறை உறவினரான ஒருவர், வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது, அவரை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுதொடர்பாக, மார்ச் 27ல், மேட்டுப்பாளையம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் வருவதை அறிந்த தாத்தா, சிறுமுகை வனப்பகுதியில் பதுங்கினார். அவரை போலீசார் மற்றும் வனத்துறையினர், ஏழு நாட்களாக தேடி வருகின்றனர். இன்னும் கிடைக்கவில்லை. போலீசார் கூறுகையில், 'வனப்பகுதியில் ஒரு குழுவும், பிற பகுதிகளில் மற்றொரு குழுவும் தேடி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார்' என்றனர்.

Advertisement