நீலகிரியில் முழு கடையடைப்பு போராட்டம்; 'அம்மா' உணவகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு உணவு

1

ஊட்டி; நீலகிரியில், இ-பாஸ் ரத்து உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்கம் சார்பில், முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நீலகிரி மாவட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இ-பாஸ் உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அதில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார், குந்தா உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், அனைத்து கடைகளையும் அடைத்து வியாபாரிகள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜாபூங்கா, படகு இல்லம் உட்பட மாவட்டத்தில் உள்ள பிற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணியர் உணவகங்கள் இல்லாததால், அவதி அடைந்து அம்மா உணவகங்கள், உள்ளூரில் உள்ள போலீஸ் உணவகங்களை தேடி சென்று உணவு உட்கொண்டனர். உள்ளூரில் பெரும்பாலான இடங்களில் ஆட்டோ, சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படவில்லை. அனைத்து இடங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

பெங்களூரு சுற்றுலா பயணி ரிஷ்வன் கூறுகையில், ''முழு கடையடைப்பு நடந்ததால், உணவுக்காக பல இடங்கள் அலைந்தோம். இறுதியாக அம்மா உணவத்தில் உணவு உட்கொண்டோம்,''என்றார்.

Advertisement