உடுமலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி; பப்பாளி காய் பதப்படுத்தும் தொழிற்சாலையில் சம்பவம்

உடுமலை; உடுமலை அருகே, பப்பாளி காய் பதப்படுத்தும் தொழிற்சாலை, தொட்டியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, விஷ வாயு தாக்கி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இரு தொழிலாளர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பூலாங்கிணர், சடையபாளையத்தில், செயின்ட் ஜோசப் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு, பப்பாளி காய்களை பதப்படுத்தி, உணவு பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 'டட்டி புரூட்' தயாரித்து, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு, உப்பு நீரில் பப்பாளி காய்களை, 10 நாட்கள் ஊற வைத்து, அதற்கு பின் இயந்திரங்கள் வாயிலாக சிறிய துண்டுகளாக மாற்றி, ஊற வைத்து, பதப்படுத்தப்படுகிறது.
துண்டுகள் ஊற வைத்து பதப்படுத்திய பின், அதனை இயந்திரங்கள் வாயிலாக வெளியேற்றுவதற்காக, 10 அடி ஆழம் உள்ள தொட்டியில், நேற்று காலை, 11:30 மணியளவில், ஒடிசா மாநிலம், தில்லாங்கூர் பகுதியை சேர்ந்த ரோகித் டிகால்,25, அருண்கோமாங்கோ, 25 ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாரதவிதமாக விஷ வாயு தாக்கி, அருண்கோமாங்கோ தொட்டியில் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற முயற்சித்த, ரோகித் டிகாலும், தொட்டியில் விழுந்து பலியானார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற உடுமலை தீயணைப்பு துறையினர், இருவரது சடலத்தையும் மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாசில்தார் கவுரிசங்கர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது, விஷ வாயு தாக்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரு தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
-
நீலகிரியில் முழு கடையடைப்பு போராட்டம்; 'அம்மா' உணவகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு உணவு
-
சிறுமி பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
-
டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி
-
கூடலுார் அருகே பெண் கொலை; போலீஸ் விசாரணை
-
கார் கண்ணாடி உடைத்து தாக்கிய ஐந்து பேர் கைது