உண்ணாவிரதம் ஒத்திவைப்பு; விசைத்தறியாளர் அறிவிப்பு

பல்லடம்; விசைத்தறி சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவிநாசியில் இன்று நடக்க இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், கூலி உயர்வு கேட்டு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து உரிய ஒத்துழைப்பு கிடைக்காததை தொடர்ந்து, அவிநாசியில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என, விசைத்தறி சங்க நிர்வாகிகள் தீர்மானித்திருந்தனர்.

இதன்படி, சோமனுார், அவிநாசி, தெக்கலூர், பெருமாநல்லூர் மற்றும் புதுப்பாளையம் ஆகிய சங்கங்கள் இணைந்து, இன்று அவிநாசியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இதற்கிடையே, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தொழிலாளர் நலத்துறை ஆணையர்கள் சாந்தி, பிரேமா மற்றும் கைத்தறி துறை உதவ இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் பங்கேற்றபின் சோமனுார் விசைத்தறி சங்க தலைவர் பூபதி கூறியதாவது:

ஒரு தரப்பு ஜவுளி உற்பத்தியாளருடன் பேச்சு நடத்தியதில்சுமூக தேர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதேபோல், மற்றொரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி கூலி பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என, கலெக்டர், மேயர் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இதேபோல், அமைச்சர் சாமிநாதனும், மொபைல் போனில் தொடர்பு கொண்டு தீர்வு ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தார்.

இதனால், நாளை (இன்று) அவிநாசியில், நடக்க இருந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement