இ.வி., கார்களை சாராமல் மாற்று எரிபொருளில் கவனம்

இந்திய சந்தைக்கு மின்சார கார்கள் மட்டுமின்றி, எத்தனால் கலப்பு, ஹைபிரிட் மற்றும் ஹைட்ரஜன் கார்களை உருவாக்குவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம் என 'டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா' நிறுவன தலைவர் விக்ரம் குலாட்டி தெரிவித்தார். நம் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

1. இந்தியாவில், எத்தனால் கலப்பு எரிபொருள் கார்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?



எத்தனால் கலப்பு எரிபொருள், இந்திய சந்தைக்கு சரியான எரிபொருளாகும். இது, கச்சா எண்ணெய் இறக்குமதி, பெட்ரோல், டீசல் நுகர்வு மற்றும் கார்பன் உமிழ்வுகளை குறைக்கிறது.

நாட்டின் எத்தனால் தேவை 1,500 கோடி லிட்டராக உள்ளது. ஆனால், எத்தனால் உற்பத்தி ஆலைகள், 1,600 கோடி லிட்டருக்கும் அதிகமான எத்தனாலை உற்பத்தி செய்கின்றன.

இந்த அதிகப்படியான உற்பத்தியை, எத்தனால் கலப்பு வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் வாயிலாக பயன்படுத்திக் கொள்ள முடியும். தற்போது எத்தனால் கலப்பு பெட்ரோலில், எத்தனால் சதவீதம் 20 சதவீதத்தை அடைந்துள்ளது. அதை, படிப்படியாக அதிகரிப்பது இந்தியாவுக்கான சிறந்த வழியாகும்.

2023ல், டொயோ ட்டோ நிறுவனம், உலகின் முதல் ஹைபிரிட் எத்தனால் கலப்பு எரிபொருள் முன்மாதிரி காரை அறிமுகப்படுத்தியது. இந்த வகையான எரிபொருளை ஊக்குவிக்க, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். அத்துடன், பெங்களூரில் உள்ள 'இந்திய அறிவியில் நிறுவனம் என்ற ஐ.ஐ.எஸ்., நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இது தொடர்பான ஆய்வுகளை செய்து வருகிறோம்.

2. வாகனத் துறையில் எதிர்காலமாக மின்சார கார்கள் பார்க்கப்படுகின்றன, இதில் டொயோட்டா நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன?



டொயோட்டா நிறுவனத்திடம் பல வகையான மாற்று எரிபொருள் தொழில்நுட்பங்கள் உள்ளன.

வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து, மின்சார கார்கள், வலுவான ஹைபிரிட் கார்கள், பிளக்கின் ஹைபிரிட் கார்கள், ஹைட்ரஜன் ப்யூயல் செல் மின்சார கார்கள், எத்தனால் கலப்பு ஹைபிரிட் கார்கள் என பல்வேறு நிலையான, பசுமை கார்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

ஒரே தொழில்நுட்பத்தை சாராமல், வெவ்வேறு மாற்று எரிபொருள் வாகனங்களை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கம்.

3. 'சுசூகி' உடனான கூட்டணி டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்துள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து வேறு எந்தெந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளீர்கள்?



சிறிய கார்கள் முதல் எஸ்.யூ.வி.,க்கள் வரை பல வகையான கார்களை இரு நிறுவனங்களும் வைத்துள்ளன.

இரு நிறுவனங்களிடம் உள்ள வலுவான தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொண்டு, எரிவாயு செலவை குறைக்கும் வகையிலான கார்களை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும். இதனால், வாடிக்கையாளர்கள் மற்றும் இரு நிறுவனங்களும் பலன் அடைவர்.

4. கர்நாடகாவில் மூன்றாவது ஆலை அமைக்க முதலீடு செய்யப்பட்டுள்ளதே, இதன் பின்னணி என்ன?



இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறோம். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் திட்டங்களை அடிப்படையாக கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கு எங்கள் பயணத்தை தொடர உள்ளோம்.

இந்த மூன்றாவது ஆலை, 3,300 கோடி ரூபாய் முதலீட்டில் கர்நாடகாவின் பிடாடி பகுதியில் அமைகிறது. 2026ம் ஆண்டு முதல், வினியோகத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம்.

இங்கு ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்ற, எங்கள் வணிகத்தையும், வினியோக சங்கிலியையும் வலுப்படுத்தி வருகிறோம்.

Advertisement