8 வயதில் காணாமல் போன சிறுவன்; 14 ஆண்டுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்ததில் நெகிழ்ச்சி

11


வாரணாசி: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் காணாமல் போய், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெற்றோருடன் இணைந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



வாரணாசி மாவட்டம் காங்காலா கிராமத்தைச் சேர்ந்தவன் சிறுவன் நீரஜ் கன்னாஜூயா. இவனுக்கு 8 வயது இருக்கும் போது, இவரது தந்தை குடும்பத்தோடு, பிழைப்பிற்காக மும்பைக்கு குடிபெயர்ந்தார். இவரது மூத்த சகோதரர் ஆடை வடிவமைப்பாளராகவும், தந்தை சலவை தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தனர்.



தந்தை வேலை செய்யும் கடைக்கு எதிரே உள்ள பேக்கரியில் 8 வயது சிறுவன் நீரஜ் பணியாற்றி வந்தான். இந்த சூழலில், மும்பையை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில், வீட்டை விட்டு வெளியேறிய நீரஜ், ரயிலில் ஏறி காணாமல் போனான். பெற்றோரை இழந்து பரிதவித்த நீரஜ், பல ரயில்நிலையங்களில் பெற்றோரை தேடி அலைந்துள்ளான். இறுதியில் அவன் ஆந்திராவின் குண்டூர் ரயில்நிலையத்திற்கு சென்றுள்ளான்.


அங்கு அவனை மீட்ட போலீசார், ஆந்திராவில் உள்ள ஸ்வர்ன பாரத் டிரஸ்டில் சேர்த்தனர்.
அந்த டிரஸ்டில் சேர்ந்த நீரஜ், அங்கேயே கல்வி பயின்றான். அவனது பெற்றோரை தேடும் முயற்சியில் டிரஸ்டின் நிர்வாகி தீபா வெங்கட் முயற்சித்தார். அதேவேளையில், நீரஜூக்கு பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வொர்க், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி மற்றும் பழுது பார்ப்பது உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இப்படியே 14 ஆண்டுகள் ஓடி விட்டன.



இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீரஜின் பெற்றோரை கண்டுபிடிப்பது தொடர்பாக, டிரஸ்ட் நிர்வாகம் சார்பில் மும்பையில் உள்ள குரார் போலீஸ் ஸ்டேஷனுக்கு மெசேஜ் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஹோலி பண்டிகைக்கு முன்பாக, பெற்றோரை கண்டுபிடிப்பதாக நீரஜையும், டிரஸ்ட் நிர்வாகி ஒருவரையும் மும்பையின் மல்லட் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.



அங்கு தந்தை பணியாற்றிய இடத்தை அடையாளம் கண்ட நீரஜ், தான் சிறு வயதில் பணியாற்றிய பேக்கரியையும் கண்டுபிடித்தார். பல்வேறு தேடுதல் பணிகளுக்குப் பிறகு, பெற்றோரை அடையாளம் கண்டு பிடித்தார். பின்னர், பெற்றோரிடம் இருந்து வந்த வாட்ஸ்ஆப் வீடியோ காலில், கண்ணீர் மல்க நடந்ததை விவரித்தார் நீரஜ்.



அதன்பிறகு, பெற்றோர் வாரணாசியில் இருப்பதை உறுதி செய்ததையடுத்து, உடனடியாக விமானத்தின் மூலம், மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றான். 14 ஆண்டுகளுக்குப் பிறகு நீரஜை, அவரது குடும்பத்தினர் கண்ணீரோடு வரவேற்றனர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement