வக்ப் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ''சர்ச்சைக்குரிய வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பார்லிமென்ட் லோக்சபாவில் வக்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது மிகுந்த கண்டனத்துக்குரியது.வக்ப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக, 232 எம்.பி.,க்கள் ஓட்டளித்து உள்ளனர். ஆதரவாக 288 எம்.பி.,க்கள் ஓட்டளித்து உள்ளனர். இந்த சட்ட திருத்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், எதிர்த்து ஓட்டளித்தவர்கள் எண்ணிக்கை 232 என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல.
திரும்ப பெறணும்
எண்ணிக்கை கூடுதலாக கிடைத்து இருக்கலாம். ஆனால் இந்த சட்டத்திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல, முழுமையாக திரும்ப பெற வேண்டியது நம் கருத்து. அதை தான் நாம் இங்கு தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி இருந்தோம். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான கட்சிகளின் எதிர்ப்பை மீறி, ஒரு சில கூட்டணி கட்சிகளின் தயவால், அதிகாலை 2 மணியளவில் வக்ப் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியலமைப்பு கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்.
வழக்கு தொடருவோம்
இதனை உணர்த்து வகையில், இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளோம். சர்ச்சைக்குரிய வக்ப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். வக்ப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழகம் போராடும், வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
கருப்பு பேட்ஜ்
சட்டசபைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து தி.மு.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். லோக்சபாவில் வக்ப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து இருந்தனர்.










