'திடக்கழிவு மேலாண்மைக்கு தனி நிலைக்குழு' வார்டு குழு கூட்டத்தில் தீர்மானம்

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம், 12வது வார்டு குழு கூட்டம், நேற்று மதியம், காலடிப்பேட்டையில், தி.மு.க., கவுன்சிலர் கவீ.கணேசன், உதவி பொறியாளர் கமலகண்ணன் தலைமையில் நடந்தது.

இதில், உதவி செயற்பொறியாளர் நக்கீரன், குடிநீர், வரி வசூலிப்பு, மின் வாரியம் மற்றும் துாய்மை பணி துறை தனியார் ஒப்பந்த அதிகாரிகள் உட்பட, பலர் பங்கேற்றனர்.

வார்டு குழு உறுப்பினர்களான, முன்னாள் கவுன்சிலர்கள் சதீஷ்குமார், வேலு உட்பட, 10 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், தொடக்கப்பள்ளிக்கு இரு கட்டடங்கள் மட்டுமே இருப்பதால், இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே, பாலகிருஷ்ணா காலனி பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தை, மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியில், பெரும் சவால் கொண்ட பணியாக கருதப்படும் துாய்மை பணி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டாலும், அதை நிர்வகிக்க, திடக்கழிவு மேலாண்மைக்கு தனி நிலைக்குழு உருவாக்கப்பட வேண்டும்.

மேற்கு மாடவீதி குடும்ப அட்டைத்தாரர்கள், 13வது வார்டில் உள்ள நியாயவிலைக் கடையில் பொருள் வாங்க வேண்டியுள்ளது. 12வது வார்டிலேயே நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என்பது உட்பட, ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement