பருத்தி பஞ்சுக்கு விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தி விளைச்சல் அதிகரித்த போதும் உரிய விலை கிடைப்பது இல்லை. எனவே நெல் போன்று விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி நடக்கிறது. சத்திரக்குடி, பரமக்குடி, உத்தரகோசமங்கை, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் 2ம் போகமாக ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது காய் பிடித்து பருத்தி பஞ்சு எடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன. ராமநாதபுரம் சந்தையில் பருத்தி பஞ்சு விலை கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.

விவசாயிகள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பஞ்சாலைகள், ஸ்பின்னிங் மில் போன்றவை இல்லை. இதனால் வியாபாரிகள் மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது முதல் தரமான பஞ்சு கிலோ ரூ.60 வரை விலைபோகிறது. இதுவே வரத்து அதிகரிக்கும் போது ரூ.40க்கு விலை குறைந்துவிடும். கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விலை கிடைத்தால் தான் சாகுபடி செலவு, ஆட்கூலி போக லாபம் கிடைக்கும். எனவே நெல் போன்று பருத்தி பஞ்சுக்கும் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.------

Advertisement