கல்லுாரி மாணவி மரணத்தில் திருப்பம் அண்ணனே கொலை செய்தது அம்பலம்

திருப்பூர்:பல்லடம் அருகே, காதல் விவகாரத்தால், கல்லுாரி மாணவியை அண்ணனே கொலை
செய்துவிட்டு, பீரோ விழுந்ததால் இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
திருப்பூர்
மாவட்டம், பல்லடம் அடுத்த பருவாயை சேர்ந்தவர் தண்டபாணி; வெல்டிங்
பணியாளர். இவரது மனைவி தங்கமணி; விசைத்தறி தொழிலாளி. இவர்களது மகன் சரவணன்,
24, எலக்ட்ரீஷியன்; மகள் வித்யா, 21, கோவை அரசு கல்லுாரியில் எம்.ஏ.,
முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த மாதம் 30ம் தேதி பெற்றோர்
சர்ச்சுக்கு சென்று விட்டு திரும்பிய போது, வீட்டில் இருந்த பீரோ சரிந்த
நிலையில் வித்யா இறந்து கிடந்தார். வித்யாவின் சடலத்தை குடும்பத்தினர்
மற்றும் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
வித்யாவை காதலித்து வந்த
திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி, 25, என்பவர், வித்யாவின்
இறப்பில் சந்தேகம் இருப்பதாக பருவாய் வி.ஏ.ஓ., பூங்கொடியிடம் அளித்த புகாரை
தொடர்ந்து, காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரித்தனர்.
பல்லடம்
தாசில்தார் சபரிகிரி முன்னிலையில் நேற்று முன்தினம் மாலை வித்யாவின்
சடலத்தை தோண்டியெடுத்து, மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்;
தலையில் காயம் இருந்ததை கண்டறிந்தனர். வித்யா மீது விழுந்த பீரோவை தடயவியல்
நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, பீரோ சரிந்து விழுந்ததற்கான சரியான
தடயமில்லை. குடும்பத்தினரிடம் துருவி துருவி விசாரித்தபோது, அண்ணன் சரவணன்,
தங்கையை கொன்றது தெரிய வந்தது.
காதல் விவகாரத்தால் கசப்பு
போலீசார் கூறியதாவது:
வித்யாவின்
காதல் விவகாரம் கடந்த டிச., மாதம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
அப்போது வித்யாவை படிப்பில் கவனம் செலுத்தும்படி சரவணன் கூறினார். காதலன்
குடும்பத்தினர், பெண் கேட்டு வந்த போது, வித்யா குடும்பத்தினர் மறுத்தனர்.
இந்த விவகாரத்தால், சில மாதங்களாக வித்யா, அண்ணனிடம் சரியாக பேசாமல்
இருந்து வந்தார். பாசமாக இருந்த தங்கை தன்னிடம் பேசாத விரக்தியில் சரவணன்
இருந்தார். காதல் விவகாரத்தால் தான் இத்தனை பிரச்னை என்று நினைத்தார்.
சகோதரரின் 'செட் டப்'
கடந்த,
30ம் தேதி பெற்றோர் சர்ச்சுக்கு சென்றபோது, பெட்ரூமில் படுத்திருந்த
தங்கையின் பின் தலையில், அரிவாளால் தாக்கினார். அதில் பலத்த காயம் ஏற்பட்டு
இறந்தார். பின் பீரோ சரிந்து விழுந்தது போல 'செட்டப்' செய்து விட்டு,
அங்கிருந்து சென்றுவிட்டார். வீட்டுக்கு திரும்பிவந்த பெற்றோர் பீரோ
அடியில் இறந்துகிடந்ததைப் பார்த்து பதறினர். பெற்றோர் தகவல் அளித்தபின்,
சரவணன் அங்கு வந்தார். தனக்கு எதுவும் தெரியாததுபோல், தங்கை
மரணமடைந்துவிட்டாரே என்று கதறினார்.
வித்யா வீட்டில் படுத்தவாறே,
கால்களால் பீரோவை திறக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதனால் தான் பீரோ
சரிந்து விழுந்ததைப் பெற்றோர் நம்பினர். பெற்றோர் சர்ச்சுக்கு செல்லும்
போதும், அதன் பின்னும் வெளியே நின்று வித்யா மொபைல் போனில் 'செல்பி'
எடுத்துள்ளார். இதை உறவினர், அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். இதனால்,
குடும்பத்தினர் மீது அவர்களுக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
இவ்வாறு போலீசார் கூறினர்.
போலீசார், சரவணனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
'காதலன் வெண்மணியும், இறந்த வித்யாவும் மிகவும்
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, இது ஆணவக்கொலை
கிடையாது' என்று போலீசார் கூறினர்.
மேலும்
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி - 104 / 3
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்