கூலி பாக்கி தரும் வரை போராட்டம்: 100 நாள் தொழிலாளர்கள் முடிவு


கூலி பாக்கி தரும் வரை போராட்டம்: 100 நாள் தொழிலாளர்கள் முடிவு


சத்தியமங்கலம்:நுாறு நாள் வேலை திட்டத்தில், பாக்கி தொகை கிடைக்கும் வரை, வேலை செய்யாமல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், சத்தியமங்கலம் சங்க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசு தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதி பாக்கி, 4,034 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்.
பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி வட்டாரங்களில், 40 ஊராட்சிகளில், 40 ஆயிரம் விவசாய தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு மாதங்களாக செய்த வேலைக்கு, கூலி வழங்கப்படாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
மூன்று வட்டாரங்களை சேர்ந்த தொழிலாளர்கள், நிலுவையில் உள்ள கூலி பாக்கியை வழங்கும் வரை, தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்திய கம்யூ., மாவட்ட செயலர் மோகன்குமார், சங்க மாநில செயலர் மகேந்திரன் மற்றும் ஒன்றிய செயலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement