இழப்பீடு தராததால் அரசு பஸ் ஜப்தி




தாராபுரம்:விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு, இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு பஸ்ஸை ஜப்தி செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த எரகாம்பட்டியை சேர்ந்தவர் வேலுசாமி. விவசாயியான இவர் கடந்த, 2015 ஜூலை 1ல், தாராபுரம், பூளவாடி ரோட்டில், டூவீலரில் சென்ற போது, தாராபுரத்திலிருந்து, பூளவாடி நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார். வேலுசாமி மனைவி காந்திமதி மற்றும் மகள்கள் நஷ்ட ஈடு கேட்டு, தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
விசாரித்த நீதிமன்றம், 2020 நவ., 7ல், வேலுசாமி குடும்பத்திற்கு, நஷ்ட ஈடாக, 7 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் வழங்க, அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. தொகை செலுத்தப்படாததால், பாதிக்கப்பட்டவர் தரப்பில், வட்டி, செலவு தொகையுடன் சேர்த்து, 12 லட்சத்து, 46 ஆயிரத்து, 544 ரூபாய் செலுத்த கோரி, நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த தொகையும் செலுத்தப்படாத நிலையில், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன் உத்தரவின்படி, தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்த அரசு பஸ்ஸை, நீதிமன்ற ஊழியர்கள், நேற்று ஜப்தி செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்டவர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சேகர் ஆஜரானார்.

Advertisement