சாலையோர பள்ளத்தில் மண் அணைக்க கோரிக்கை

பவுஞ்சூர்:பவுஞ்சூர், கீழக்கண்டை கிராமத்தில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வகையில் உள்ள சாலையோர பள்ளத்தில் மண் கொட்டி சமன்படுத்த வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

பவுஞ்சூர் அருகே கீழக்கண்டை கிராமத்தில் இருந்து முருகம்பாக்கம் செல்லும் தார்ச்சாலை உள்ளது.

இந்த சாலையில் தினமும், ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

சாலையின் இரண்டு புறத்திலும், மழையின் போது மண் அரிப்பு ஏற்பட்டு, பள்ளங்கள் உருவாகி உள்ளன.

இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மண் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement