20ம் நூற்றாண்டை நினைவு கூரும் இடுக்கி நினைவு சுற்றுலா கிராமம்

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் 20ம் நூற்றாண்டில் குடியேறிய விவசாயிகளின் வாழ்க்கையை சித்தரிக்கும் நினைவு சுற்றுலா கிராமம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இடுக்கி மாவட்டம் அடர்ந்த வனங்களைக் கொண்ட மலையோர பகுதியாகும். அங்கு ஆரம்ப காலங்களில் பல பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்த விவசாயிகள் குடியேறினர். அவர்கள் குடியேறிய விதம், வெளியேற்றப்பட்ட வரலாறு, மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவரும், ஆரம்பகால லோக்சபா எதிர்கட்சி தலைவருமான ஏ.கே. கோபாலன் நடத்திய போராட்டங்கள், விவசாயிகளின் வாழ்க்கை தரம், காட்டு யானைகளை விரட்ட கையாண்ட விதம், விவசாயம் உள்பட 20ம் நூற்றாண்டில் மக்கள் அனுபவித்த துயரங்களை சித்தரிக்கும் வகையில் நினைவு சுற்றுலா கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சிமென்ட் கலவையால் சிற்பங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.

இடுக்கி ' ஆர்ச்' அணை அருகே மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழக பூங்காவையொட்டி ஐந்து ஏக்கரில் இது அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு சுற்றுலா துறை சார்பில் 2019ல் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் முதல்கட்டமாக ரூ.3 கோடியில் பணிகள் நடந்தது. தற்போது கட்டுமான பணிகள் பூர்த்தியான நிலையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடக்கிறது. விரைவில் சுற்றுலா கிராமம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement