ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்த ஆசிரியர்கள் நள்ளிரவு வரை காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி அரசு தொடக்க பள்ளிக்கு 156 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு பணி செய்து வந்தனர். இந்நிலையில் அவரது ஒப்பந்த பணிக்காலம் கடந்த 31-ந் தேதி முடிந்தது.

ஆனால் அவர்களுக்கு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் நேற்று முன்தினம் பள்ளிகள் துவங்கியபோது அவர்கள் பணிக்கு செல்ல முடியவில்லை.

அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் நேற்று மாலை சட்டசபை வளாகம் முன்பு குவிந்தனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாரதிபூங்கா நுழைவாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே முக்கிய நிர்வாகிகள் முதல்வர், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்து பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரவு முதல் மாதா கோவில் வீதியில் காத்திருப்பு போராட்டத்தினை தொடங்கினர்.

இந்த போராட்டம் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. அவர்கள் செல்போனில் விளக்குகளை எரிய விட்டபடி போராட்டம் நடத்தினர்.

Advertisement