மீன் வளர்ப்புக்கு மானியம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் 2024 - 25 ம் ஆண்டில் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்தலுக்கான மானியம் வழங்கும் திட்டம், புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம், கொல்லைப்புற, நடுத்தரம், ஒருங்கிணைந்த அலங்கார மீன்கள் வளர்த்தெடுக்கும் திட்டம், உயிருள்ள மீன்கள் விற்பனை நிலையம் அமைத்தல் திட்டம் மீன்வளத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
புதிய மீன்குஞ்சு வளர்த்தல், குளம் அமைத்தல் திட்டத்திற்கு ரூ.7 லட்சம் மதிப்பில் 60 சதவீதமாக ரூ.4.20 லட்சம் மானியம் வழங்கப்படும். பயோபிளாக் முறையில் மீன்கள் வளர்க்கும் திட்டத்திற்கு திட்ட மதிப்பீடு ரூ.7.5 லட்சம் எனில் 60 சதவீதமாக ரூ.4.50 லட்சம் மானியம் வழங்கப்படும்.
புறக்கடை, கொல்லைப்புற அலங்கார மீன்கள் வளர்ப்பு திட்டத்தில் திட்ட மதிப்பீடு ரூ.3 லட்சம் என்றால் 60 சதவீதமாக ரூ.1.80 லட்சம் அரசு மானியம் கிடைக்கும்.
நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்ப்புக்கு ரூ.8 லட்சம் எனில் 60 சதவீத மானியமாக ரூ.4.8 லட்சம், ஒருங்கிணைந்த அலங்கார வண்ண மீன்கள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.25 லட்சத்தில் 60 சதவீத மானியமாக ரூ.15லட்சம் வழங்கப்படும்.
இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர், 15 நாட்களுக்குள் மதுரை பேச்சியம்மன்படித்துறை பகுதியில் இயங்கும் மீன்வள நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறறு உரிய ஆவணங்களுடன் (ஆதார், ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு: 0452- 234 7200.