என்ன வசதி இருக்கு கண்ணனேந்தல் பகுதியில் ஒன்றுமில்லை என்கின்றனர் 8வது வார்டு மக்கள்

மதுரை: ஆக்கிரமிப்பாலும், பாதாள சாக்கடை வசதி இல்லாமலும் பல்வேறு பிரச்னைகளுடன் வசிப்பதாக கண்ணனேந்தல் மக்கள் கவலைப்படுகின்றனர்.

மதுரை மாநகராட்சி வார்டு 8ல் கண்ணனேந்தல், பொறியாளர் நகர், ஆர்.ஆர். நகர், மீனாட்சி அம்மன் நகர், அய்யாவுத்தேவர் நகர், பாரத் நகர் பகுதிகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். எல்லா வார்டுகளையும் போல இங்குள்ளோரும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

எப்போது தொடங்கும் பாதாளச் சாக்கடை



அய்யப்பன் நகர் ஜெயப்பிர காஷ்: பழைய பாதாளச் சாக்கடை திட்டம் குறிஞ்சித் தெருவோடு முடிந்தது. சமீபத்தில் வெளியான அறிவிப்பில் அனைத்து பகுதியிலும் திட்டம் அமைக்கப்படும் என தெரிவித்தனர். இதுவரை தொடங்கவில்லை. திட்டம் முடிய பல மாதங்கள் ஆகும் என்பதால், வேலையை துரிதபடுத்த வேண்டும். பாதாள சாக்கடை கால்வாய் அவசியமானது என்பதால் அதனை உடனே செயல்படுத்த வேண்டும். தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். தெருநாய்கள் பிரச்னைகளுக்கு உடனடி முடிவு கட்ட வேண்டும்.

காலி இடங்கள் ஆக்கிரமிப்பு



சண்முகா நகர் அலெக்ஸ்: பிரதான ரோட்டில் உள்ள காலி இடத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எந்நேரமும் சமூக விரோத செயல்கள் நடப்பதால் பெண்கள் நடமாட அச்சப்படுகின்றனர். கண்ட இடங்களில் கனரக வாகனத்தை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை, துர்நாற்றம் உள்ளது. 13 ஆண்டுகளாக புதிய ரோடு அமைக்கவில்லை. கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பிறபகுதிகளில் சோதனை தொடங்கிவிட்டனர். இங்கோ இதுவரை குழாய் கூட அமைக்கவில்லை.

கோரிக்கைகளை நிவர்த்தி செய்வோம்



கவுன்சிலர் (தி.மு.க.,) ராதிகா: அய்யப்பன் நகர், பொறியாளர் நகர் உட்பட பலபகுதிகளில் 119 புதிய ரோடுகள் அமைத்துள்ளோம். ஆர்.ஆர்., நகரில் மக்கள் நல்வாழ்வு மையம் ரூ.30 லட்சத்தில் திறக்கப்பட்டுள்ளது. கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் 90 சதவீதம் முடிந்து சோதனை செய்கிறோம். விடுபட்ட பகுதியிலும் விரைவில் குழாய் அமைப்போம்.

சில திட்டங்கள் புதிதாக வரும் போது தாமதம் ஆகலாம். ஆனால் பணியை சிறப்பாக செய்வதற்காகவே தாமதம் ஏற்படுகிறது. பாதாளச் சாக்கடை திட்டம் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கப்படும். தெருவிளக்கு, குப்பை வண்டி தேவை குறித்து மனு அளித்துள்ளோம். தெருநாய் பிரச்னைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. சமுதாயக்கூடம் வேண்டி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரூ. 60 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடக்கின்றன. அனைத்து திட்டங்களும் முடிந்த பின் விடுபட்ட ரோடுகளை முழுமையாக அமைப்போம். மக்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்.

Advertisement