முருங்கைக்கு இல்லை விலை; விவசாயிகள் பாதிப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, கொசவபட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை, விருப்பாட்சி, காளாஞ்சிபட்டி, அத்திக்கோம்பை சுற்றியுள்ள பகுதிகளில் செடி முருங்கை அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில் பல இடங்களில் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால் விலை நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது. நேற்று கிலோ கரும்பு முருங்கை ரூ. 7, செடி முருங்கை ரூ. 6, மரம் முருங்கை ரூ.5 க்கு விற்பனையானது.

உரம், பூச்சி மருந்து, நடவு , பறித்தெடுக்கும் கூலி ஆகியவற்றை கணக்கிட்டால் பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாக என விவசாயிகள் தெரிவித்தனர். அறுவடை தொடர்வதால் முருங்கை விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை. விளைச்சல் அதிகமாக உள்ள காலங்களில் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை சந்திக்காமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்க வேண்டும். முருங்கைப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பதற்குரிய ஆலோசனைகளை கிராமங்கள் தோறும் வழங்க வேண்டும். மேலும் இப்பகுதியில் முருங்கை பவுடர் தொழிற்சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement