சட்டசபையில் ஆளுங்கட்சியினர் கோஷம் கண்டித்து பா.ஜ.,வினர் வௌிநடப்பு
சென்னை:''மத்திய அரசு முஸ்லிம்களுக்கு எதிரானது போன்ற மாயையை ஏற்படுத்தி, தி.மு.க., ஓட்டு வங்கி அரசியலை தேடுகிறது,'' என, சட்டசபை பா.ஜ., குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
வக்ப் சட்ட திருத்தம், ஏற்கனவே பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு, சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், கருப்பு, 'பேட்ஜ்' அணிந்து, கோஷம் எழுப்பினர்.
சட்டசபையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தும். ஆனால், சட்டசபையையே போராட்ட களமாக முதல்வர் மாற்றி உள்ளார். இது, வருத்தத்திற்குரியது.
மத்திய அரசு, எந்த திட்டம் கொண்டு வந்தாலும், அதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசு, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருப்பது போன்ற மாயையை, முதல்வர் ஏற்படுத்துகிறார்.
ஏனெனில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ளது. கடந்த, 10 ஆண்டு பிரதமர் மோடி ஆட்சியில், முஸ்லிம்களுக்கு எங்கேனும் எதிர்ப்பு இருந்தால் கூறலாம்.
முஸ்லிம்களுக்கு எதிராக, மத்திய அரசு இருப்பது போன்ற மாயை ஏற்படுத்தி, தி.மு.க., அரசு ஓட்டு வங்கி அரசியலை தேடுகிறது.
சட்டசபையில் கோஷம் போட்டது, இதுதான் முதல் முறை. எதிர்க்கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வருவர். ஆளும் கட்சியே அணிந்து வருவது தேவையற்றது. அதை கண்டித்து, வெளிநடப்பு செய்துள்ளோம்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.