சாயல்குடியில் ஆக்கிரமிப்புகள் ஏப்.,7க்குள் அகற்ற கெடு விதிப்பு

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய நகர் பகுதிகளான ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, அருப்புக்கோட்டை சாலை, பேரூராட்சி பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொதுமக்களுக்கு அதிக போக்குவரத்து நெருக்கடி இடையூறுகளை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

சாயல்குடி பேரூராட்சி பகுதிகள், பஸ்ஸ்டாண்டில் வருவாய்த் துறையால் குறியீடு மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக கடைகளை அமைத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் ஏப்., 7க்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிக் கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில் மறுநாள் ஏப்.,8ல் பேரூராட்சி நிர்வாகம் அகற்றும் என்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவு டூவீலர்கள் மற்றும் வாடகை வாகனங்களை நிறுத்துவதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சனிக்கிழமை வாரச்சந்தை நாட்களில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே வருவாய்த்துறையினர், போலீசார் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement