'தங்கையை விட ஜாதி பெருமை பெரிது இல்லை'

கோவை; திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, மாற்று இன இளைஞரை காதலித்ததால், உடன்பிறந்த சகோதரி என்றும் பாராமல், அவரை அண்ணனே கொலை செய்த சம்பவம், பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'அண்ணா... அண்ணா' என உரிமையுடன் சுற்றிச்சுற்றி வந்த தங்கையை விட, 'எனக்கு ஜாதிதான் முக்கியம்' என்ற முடிவுக்கு அவரது அண்ணன் வர, என்ன காரணம்? பொருமித்தீர்க்கின்றனர் கல்லுாரி மாணவ, மாணவியர் சிலர்.
ஜாதி பெருமை அல்ல
தங்கையை விட ஜாதி பெரிதாகி விட்டதை, நினைக்கும் போது தான் கஷ்டமாக உள்ளது. அப்படி ஜாதி என்ன செய்து விட்டது. பெருமை என நினைத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். பெருமை என, சமுதாயத்தினர் நினைப்பது தவறு. இங்கு நல்ல தலைவர்கள் இல்லாததே இதற்கு காரணம்.
- சஞ்சீவ் ஆதித்யா
கல்லுாரி மாணவர், துாத்துக்குடி
போதாத கல்வியறிவு
கவுரவத்துக்காக உடன்பிறந்த தங்கையை, கொலை செய்தது முற்றிலும் தவறான ஒன்று. போதிய கல்வியறிவு இல்லாததே இதற்கு காரணம். படித்தவர்களும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது தவறு. இது குறித்து, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- கே.ஸ்ரீமதி
கல்லுாரி மாணவி, ஈரோடு.
பெற்றோர் ஏற்க வேண்டும்
கலப்பு திருமணத்தை, பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் மாற வேண்டும். இன்று உலகம் போகும் வேகத்தில், இது சாதாரணம் தான். மற்ற விஷயங்களுக்கு உலக நாடுகளை உதாரணமாக கூறுவோர், இதில் மட்டும் ஏன் முரண்படுகின்றனர்?
- வி.காஞ்சனா, கல்லுாரி மாணவி, திருச்சி.
சட்டம் இயற்ற வேண்டும்
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும். அதில் யாரும் தலையிடக்கூடாது. அவ்வாறு தலையிடும்போதுதான், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆணவக்கொலைக்கு எதிராக, தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும்.
- சஞ்சய் அமர்நாத்
கல்லுாரி மாணவர், திருநெல்வேலி.
பெற்றோர் மாற வேண்டும்
காலத்துக்கு ஏற்ப பெற்றோர் கட்டாயம் மாற வேண்டும். கொலை செய்யும் எண்ணத்தை தங்கள் மனதில் இருந்து முற்றிலும் அகற்ற வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் ஏற்படாமல் இருக்க, தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும்.
- ஏ. சங்கரி
கல்லுாரி மாணவி, திருப்பூர்
பாதுகாவலர்கள் மட்டுமே
பெற்றோர் என்பவர்கள் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும். அவர்களே இதுபோன்ற தவறுகளில் ஈடுபடக் கூடாது. அதிகபட்சம் தங்களது பிள்ளைகளை, 22 வயது வரை மட்டுமே கட்டுப்படுத்தலாம். அதன் பின்னர் அவர்கள் முடிவுகளில் தலையிடக்கூடாது.
- ஆலன் மேத்யூ, கல்லுாரி மாணவர், வாளையார்.
தனிப்பட்ட உரிமை
தங்களுக்கு விருப்பப்பட்டவர்களை தேர்ந்தெடுப்பது, அவரவர் விருப்பம். ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் பெற்றோர்கள், பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியும். இந்த சுடும் உண்மையை, பெற்றோர் உணர வேண்டும். 18 வயதுக்கு மேல் நன்மை, தீமைகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். -கே.ஹரிஹரசுதன்
கல்லுாரி மாணவர், பொள்ளாச்சி.
உலகம் வேகமாக செல்கிறது
பெற்றோர்கள் மாற வேண்டும். இன்று உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது. அப்படி இருக்கும் போது இன்னும் ஆணவக்கொலை நடப்பது சரியல்ல. வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வது, பிள்ளைகளின் தனிப்பட்ட விஷயம். ஆனால் சரியாக வழிகாட்ட வேண்டும்.
- எஸ்.பார்த்தீபன்
கல்லுாரி மாணவர், சூலுார்.
மேலும்
-
பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவத்தை கலாய்த்த அமைச்சர் துரைமுருகன் பா.ம.க., - எம்.எல்.ஏ.,வை கலாய்த்த துரைமுருகன்
-
மாதக்கணக்கில் தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கால்...மூச்சுத்திணறல்:மாநகராட்சியே கொளுத்துவதாக 'பகீர்' குற்றச்சாட்டு
-
கோவில் நிலங்களுக்கு பட்டா 'நோ'
-
17 மாவட்டங்களில் 50 புதிய குறு வட்டங்கள் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு
-
கச்சபேஸ்வரர் தெப்போத்சவம் தாயார் குளத்தில் இன்று துவக்கம்
-
துாத்துக்குடி அனல் மின் நிலைய தீவிபத்து சேதம் குறித்து ஆய்வு செய்கிறது குழு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்