பள்ளத்துார் வலந்தான் திருவிழாவில் சிலம்பு கட்டி ஆடி வந்த இளைஞர்கள்

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்துார் முத்துமாரியம்மன் கோயில் வலந்தான் திருவிழாவில், பாரம்பரிய சிலம்பை காலில் கட்டி ஊர்வலமாக ஆடி வந்தனர்.

பள்ளத்துார் மனமகிழ்ந்து கண்ட விநாயகர் கோயில், முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா மற்றும் பால்குடத் திருவிழா மார்ச் 25 ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

மார்ச் 28 ம் தேதி விளக்கு பூஜை, மார்ச் 30 பூத்தட்டு நடந்தது. முக்கிய திருவிழாவான பால்குட திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று, கரகத் திருவிழா மற்றும் பாரம்பரிய வலந்தான் திருவிழா நடந்தது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெறும் இத்திருவிழாவில், இளைஞர்கள் சிலம்பு கட்டி ஊர்வலமாக நடனமாடினர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில்: பள்ளத்துார் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவின், கடைசி நாளன்று கரகம் மற்றும் வலந்தான் திருவிழாவின் போது வல்லம்பர் சமுதாய இளைஞர்கள் பாரம்பரிய சலங்கையை காலில் கட்டி ஊர் சுற்றி ஆடி வருவது வழக்கம். 300 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக இத்திருவிழா நடந்து வருகிறது. அனைத்து சமுதாயத்தின் ஒற்றுமையை வலியுறுத்தியும், விவசாயம் செழிக்கவும், சொந்த பந்தங்கள் பகையை மறந்து ஒன்று கூடவும் முன்னோர்களால் பாரம்பரியமாக விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சிலாகை ஆட்டம்



திருவிழாவின் கடைசி நாளான நேற்று காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் முத்து மாரியம்மன் கோயிலில் இடுப்பில் வேல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சிலாகை ஆட்டம் ஆடி ஊர்வலம் வந்தனர். வழி நெடுகிலும் மக்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றினர்.

Advertisement