பட்டமங்கலத்தில் பூச்சொரிதல் விழா

திருப்புத்துார்: கல்லல் ஒன்றியம் பட்டமங்கலத்தில் மதியாத கண்ட விநாயகர்,அழகு சவுந்தரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் நடந்தது.

மார்ச் 24 ல் அடைக்கலம் காத்த அய்யனார் பூதமெடுப்பும், பிடி மண் கொடுத்தலும், தொடர்ந்து சைவமுனீஸ்வரருக்கு பூஜை, பூதம் பிள்ளையார் கோயில் புறப்பாடு, அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலுக்கு பூதம் செல்லுதல் நடந்தது. நேற்று காலை அம்பாளுக்கு 11:00 மணிக்கு அபிஷேகம் நடந்து அலங்காரத்தில் அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 22 கிராமத்தினரும் பூத்தட்டுக்களுடன் வந்து அம்பாளுக்கு பூச்சொரிதல் நடந்தது.

இன்று காலை 9:30 மணிக்கு மேல் விநாயகர், அழகு சவுந்தரி அம்பாளுக்கு காப்புக் கட்டி பங்குனி உத்திரத் திருவிழா துவங்குகிறது.இரவில் கேடயத்தில் அம்பாள் திருவீதி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தினசரி காலையில் அம்பாள் திருவீதி புறப்பாடும், இரவில் பூத,அன்னம்,சிம்ம,ரிஷப,யானை வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். ஏப்.8 ல் சூரசம்ஹாரமும், ஏப்.11ல் மாலையில் தேரோட்டமும்,மறுநாள் காலை மஞ்சுவிரட்டு, தீர்த்தம் கொடுத்தலும், இரவில் பூப்பல்லக்கும் நடைபெறும். ஏப்.13 காலையில் காப்புக்களைதலும்,இரவில் ஊஞ்சல் திருநாளுடன் விழா நிறைவடைகிறது.

Advertisement