சிட்டி கிரைம் செய்திகள்

மொபைல் பறித்த சிறுவன் கைது



தேனி, கம்பம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷெரிப், 19; ஈச்சனாரி பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி, முகமது ஷெரிப் ஆத்துபாலம் பகுதியில் நின்று தனது மொபைல் போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சிறுவன், செரிப் கையில் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினார். ஷெரிப், கரும்புக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது குறிச்சி பிரிவை சேர்ந்த, 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

சாலை விபத்தில் வாலிபர் பலி



உக்கடம், பூமாரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தம்பி, 38. இவர் தனது ஸ்கூட்டரில் பூமார்க்கெட் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று, தம்பி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் துாக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், தம்பியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

குட்கா விற்ற மூவர் கைது



பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குட்கா விற்பனை நடப்பதை தடுக்க போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள இரண்டு பெட்டிக்கடைகள், சவுரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி என, மூன்று இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா விற்பனையில் ஈடுபட்ட ரமேஷ், 39, உதயகுமார், 43, காளீஸ்வரன், 33 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement