கண்மாய் காப்போம் . . . : கண்மாயை தூர்வாரி பராமரிக்க வேண்டும்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கண்மாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும், வரத்து ஓடைகள் சேதமடைந்தும், தண்ணீரின்றி வறண்டும் கிடப்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

அருப்புக்கோட்டை எம்.ரெட்டியபட்டி அருகே மறவர் பெருங்குடி ஊராட்சியை சேர்ந்தது மீனாட்சிபுரம். இங்குள்ள கண்மாய் 93 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள விவசாயத்திற்காக 1986 ல், கண்மாய் உருவாக்கப்பட்டது. முன்பு, கண்மாயை சுற்றி 150 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது.

பருத்தி, நெல், சூரியகாந்தி, மல்லி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். சுற்றியுள்ள கிராமங்களுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் இருந்துஉள்ளது.

கண்மாய்க்கு கொப்புசித்தம்பட்டி, பந்தல்குடி பகுதிகளில் இருந்தும், முத்துராமலிங்கபுரம்,கரிசல்குளம் பகுதிகளில் இருந்தும் மழைக்காலத்தில் தண்ணீர் வரும். நாளடைவில் கண்மாய் பராமரிப்பு இன்றி போனாதால், சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும், காட்டாமணக்கு செடிகள் கண்மாய் முழுவதும் படர்ந்துள்ளது.

மழைநீர் வரத்து ஓடைகள் சேதமடைந்தும், அடைபட்டும் போனதால் கண்மாயில் தண்ணீர் தேங்குவது குறைந்து போனது. மழைக்காலத்தில்கண்மாய் நிறைந்தாலும் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வெளியேறி விடுகிறது. மழை காலத்தில் அதிக தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி பயிர்களை மூழ்கடிக்கிறது.

கண்மாய் முற்றிலும் பராமரிப்பின்றி போனதால் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் விவசாயமின்றி தரிசு நிலங்களாக உள்ளது. கண்மாயில் அடர்த்தியாக சீமை கருவேல மரங்கள் இருப்பதால் காட்டுப்பன்றிகள் வசிப்பிடமாக மாறிவிட்டது. இந்தக் கண்மாய் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதா பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளதா என தெரியாமல் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் அழியும் நிலையில் உள்ள மீனாட்சிபுரம் கண்மாயை தூர்வாரி கரைகளை உயர்த்தி ஷட்டர்களை பழுது நீக்கி தண்ணீர் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம் பாழ்



கிருஷ்ணசாமி, விவசாயி:மீனாட்சிபுரம் கண்மாய்அருகில் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். கண்மாய்33 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.

கண்மாய நம்பி உள்ள விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாக போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பலமுறை கோரிக்கை வைக்கும் கண்மாயை தூர்வாருவதில் அரசு மெத்தனம் காட்டுகிறது. 150 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாழாகி விட்டது.

பராமரிப்பு அவசியம்



கருப்பசாமி, விவசாயி: மீனாட்சிபுரம் கண்மாய் அழியும்நிலையில் உள்ளது. கண்மாயில் சீமை கருவேல மரங்கள், காட்டாமணக்கு செடிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் காட்டுப்பன்றிகள் வசிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. இருக்கின்ற விவசாயத்தை இவைகள் கெடுக்கின்றன.

தேவையற்ற மரங்கள் முட்புதர்களை அகற்றி கண்மாயை பராமரிப்பு செய்ய வேண்டும். வருகின்ற மழைக் காலத்திற்குள் கண்மாயை தூர்வாரி பராமரிக்க வேண்டும்.

ஷட்டர்கள், மடைகள் பழுது



குருசாமி, விவசாயி: மீனாட்சிபுரம் கண்மாயின் ஷட்டர்களை சுற்றி காட்டாமணக்கு செடிகள் படர்ந்து உள்ளதால் செயல்படாமல் பழுதாகி விட்டது. கண்மாய்க்கு வரும் மழை நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும்.

கண்மாய் கரைகளை உயர்த்த வேண்டும். கண்மாயை ஆழப்படுத்தி மழைநீர் தேங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement