10 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூர்; அசாம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸில் சிலர் கஞ்சா கடத்தி வருவது குறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் மற்றும் மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருப்பூரை ரயில் வந்தடைந்த போது, சந்தேக நபர்களிடம் விசாரித்தனர். அவர்கள், கேரளாவை சேர்ந்த சுந்தர், 27, அஜீத், 24 மற்றும் பாபி, 21 என்பது தெரிந்தது.

மூன்று பேரும் வெளிமாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கஞ்சா பொட்டலத்தைக் கடத்தி வந்தது தெரிந்தது; மூன்று பேரையும் கைது செய்து, 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த வாலிபரிடம் விசாரித்தனர். ஒடிசாவை சேர்ந்த சுபால் சாஹூ, 22 என்பது தெரிந்தது, பேக்கில் சோதனை செய்த போது விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, 5 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், திருப்பூர் ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் திருப்பூருக்கு வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் சோதனை செய்தனர். கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதனை செய்தனர். அதில், 2.5 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. அதனை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement