ரேஷன் கடையில் காலாவதி மளிகை பொருட்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பூர்; ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி, சமையலுக்கு தேவையான மசாலா பாக்கெட்டுகள், பாசி பயிறு, கொள்ளு, குளியல் சோப்பு, சலவை சோப்பு, சேமியா பாக்கெட் உள்பட பல்வேறு வகை மளிகை பொருட்களும் விற்கப்படுகின்றன.
மாவட்டத்திலுள்ள ரேஷன்கடைகளில் காலாவதி மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, தன்னார்வ அமைப்பினர், மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
திருப்பூர் வடக்கு தாலுகா, செட்டிபாளையம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின்பிரபு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று சோதனை நடத்தினர். மொத்தம் ஏழு ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
நந்தா நகரிலுள்ள ரேஷன் கடையில் நடத்திய ஆய்வில், காலாவதியான 10,521 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. 2,709 ரூபாய் மதிப்பில் காலாவதியான, 129 சேமியா பாக்கெட், 7,812 ரூபாய் மதிப்பிலான, 279 பிரியாணி பேஸ்ட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
காலாவதி மளிகை பொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, செட்டிபாளையம் கூட்டுறவு சங்க செயலாளர் பூங்கோதையிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ரேஷன் கடையில் காலாவதி மளிகைப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.