கிணற்றில் 5 நாளாக தவித்த பூனை மீட்பு; நெகிழவைத்த 'பாசப் போராட்டம்'

திருப்பூர்; திருப்பூர் அருகே ஐந்து நாட்களாக கிணற்றுக்குள் தவித்து வந்த பூனையை மீட்ட தீயணைப்பு வீரர்கள், குட்டிகளுடன் சேர்த்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
கொடுவாய், பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 45; ஓட்டல் தொழிலாளி. இவரது வீட்டில் கடந்த, நான்கு ஆண்டுகளாக 'மீனு குட்டி' என்ற பெயரில் பூனை ஒன்றை செல்லமாக குடும்பத்தினர் வளர்த்து வந்தனர்.
கடந்த, பத்து நாட்கள் முன், நான்கு குட்டிகளை மீனு குட்டி ஈன்றது. தாயின் மடியில் விளையாடிய படி குட்டிகள் இருந்தன. திடீரென, ஐந்து நாட்களாக மீனு குட்டியை காணவில்லை. தாயை பிரிந்த குட்டிகள் பாலுக்காக ஏங்கின. குடும்பத்தினர் ஸ்பூன் மூலம் பாலை ஊட்டி வந்தனர்.
வீட்டுக்கு அருகே இருந்த, நுாறு அடி ஆழ கிணற்றுக்குள் பூனை விழுந்தது தெரிய வந்தது. திருப்பூர் தெற்கு தீயணைப்பு அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர்.
தீயணைப்பு வீரர் அழகு ராஜா கயிறை கட்டிய படி உள்ளே இறங்கி, ஐந்து நாட்களாக கிணற்றுக்குள் தவித்த மீனு குட்டியை பத்திரமாக மேலே கொண்டு வந்தார். கிணற்றிலிருந்து வெளியே வந்த பூனை தனது குட்டிகளை நோக்கி ஓடியது.
நாவால் குட்டிகளை வருடி கொடுத்தது, அதன் பாசப்போராட்டம் சுற்றியிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.