கொள்ளிடத்தில் மணல் அள்ள அனுமதிக்கு தடை கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதித்ததை எதிர்த்து தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பாபநாசம் அருகே எடக்குடி சாமிதுரை தாக்கல் செய்த பொதுநல மனு:
எடக்குடியின் ஒருபுறம் கொள்ளிடம் ஆறு, மறுபுறம் மண்ணியாறு உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் உயரமான மணல்மேடு பகுதியில் மணல் அள்ள ஒருவருக்கு கனிமவளத்துறை அனுமதியளித்துள்ளது. வெள்ளப் பெருக்கிலிருந்து 40 கிராமங்களை இயற்கை அரணாக மணல்மேடு பாதுகாக்கிறது. 1987 மற்றும் 2004- --- -05 ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது 4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மணல்மேட்டில் தஞ்சம் அடைந்தனர். இது வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரியும்.
மணல் அள்ளுவதன் மூலம் அரசு மற்றும் கோயில் நிலத்தில் நிலச்சரிவு ஏற்படும். மணல்மேடு நிலத்தின் இயற்கைவளம் அழியும். கிராமங்களுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்துவிடும். வெள்ளத்தின்போது கிராம மக்களை பாதுகாக்க இடம் இல்லாமல் போகும். மணல்மேட்டை பாதுகாக்க ஏற்கனவே கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு தமிழக தலைமைச் செயலர், கனிமவளத்துறை கமிஷனர், தஞ்சாவூர் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.