கல்குவாரி கருத்துக்கேட்பில் காரசாரம்

பல்லடம்; பல்லடம் அடுத்த பள்ளிபாளையம் கிராமத்தில் கல்குவாரி குறித்த கருத்துக்கேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் சத்யன் ஆகியோர் தலைமையில் நடந்தது. கருத்துக்கேட்பில், 'அனுமதி தரக்கூடாது'; 'அனுமதி தர வேண்டும்' என இருதரப்பு கருத்துகளை முன்வைத்து காரசார விவாதம் நடந்தது.


''பொதுமக்களின் கருத்துக்கள் அனைத்தும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்'' என, மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் சத்யன் கூறினார்.

குவாரியே வேண்டாம் என்றால் வீடு, சாலை எப்படி அமைப்பது?



சிவ சந்தோஷ், அவிநாசி: கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கட்டுமான தொழில் பாதிக்கப்படுகிறது. விலை கட்டுக்குள் வர, விதிமுறைகளுக்கு உட்பட்டு குவாரிகளுக்கு அனுமதி தர வேண்டும்.


விஸ்வநாதன், தேவராயம்பாளையம்: குவாரிகளால் முற்றிலும் பாதிப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால், குவாரியே வேண்டாம் என்றால் எதை பயன்படுத்தி வீடு, கட்டடங்கள் கட்டுவது? ரோடு போடுவோம் என்பதை சிந்திக்க வேண்டும். குவாரிகளில் இருந்துதான் அனைத்து கட்டுமான மூலப்பொருட்களும் கிடைப்பதால். அனுமதி மறுப்பது தவறு. வரைமுறைக்கு உட்பட்டு குவாரிகள் பாதுகாப்புடன் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.


பூபாலன், திருப்பூர்: பாலம், ரோடு, வீடு, கட்டடம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் கல்குவாரி தொழில் அவசியம். விதிமுறைப்படி இயங்க புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைக்கு கொண்டுவந்து மாசு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


செல்வகுமார், கருமத்தம்பட்டி: கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக, ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.புதிய குவாரிகளுக்கு அனுமதி அளித்து, கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க நடவடிக்கை தேவை.


வாக்குவாதம் செய்த விசைத்தறியாளர்கள்





கூட்டத்தில் பேசிய ஒருவர், 'கல்குவாரி தொழில் மட்டுமல்ல... எல்லா தொழிலிலும் ஏதாவது ஒரு பிரச்னை இருக்கும். விசைத்தறி தொழிலிலும் கூட தறிகள் இயங்குவதால் சத்தம் ஏற்படுகிறது' என்றார். இதைக்கேட்டு கூட்டத்திலிருந்த விசைத்தறியாளர்கள், பொதுமக்கள் சிலர், கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


கல்குவாரி தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் விசைத்தறி தொடர்பாக ஒருவரது கருத்தைத் தொடர்ந்து, இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விதிமுறை பின்பற்றி இயங்குகிறதா குவாரி!



மூர்த்தி, பள்ளிபாளையம்: வெடிவைப்பதால் விசைத்தறிக்கூட கட்டடங்களில் விரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே நஷ்டத்தில் தொழில் செய்து வருகிறோம். புதிய கல்குவாரி வேண்டாம்.ரமேஷ்குமார், கிடாத்துறை: எல்லாம் விதிமுறைப்படி நடக்கிறது என யாராவது உறுதி தர முடியுமா? வெளியூர் நபர்களை நம்பி கல்குவாரிக்கு அனுமதி தருவது சரியாக இருக்காது.


பழனிசாமி, கிடாத்துறைப்புதுார்: யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தொழில் செய்தால் யார் கேள்வி கேட்பார்கள்? உள்ளூர் மக்களுக்கு சொல்லாமல் வெளியூர் நபர்களை கொண்டு நடத்துவதுதான் கருத்து கேட்பு கூட்டமா?



ஈஸ்வரன், மாவட்ட தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்: ஒரு தொழிலை விவசாயிகள் கெடுத்தார்கள் என்பது சரியாக இருக்காது. ஆய்வு செய்து கனிம வள கடத்தலை தடுப்பதுடன், விதிமுறை மீறாமல் தொழில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். கருத்து கேட்டபின் கருத்துகளுக்கு முழுமையான செயல்வடிவம் தர வேண்டும்.


ராமாத்தாள், பூமலுார்: குவாரி தொழிலால், ஆடு, மாடு வளர்ப்பு, விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.


முகிலன், சுற்றுச்சூழல் ஆர்வலர்: உரிமம் காலாவதியான குவாரி, 4 ஆண்டாக இயங்கி வருகிறது. குவாரி இருந்தால் 300 மீ.,க்குள் குடியிருப்பு, உயர் மின் கோபுரம், நீர் நிலைகள் இருக்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆவணங்களில் இவற்றை மறைத்து அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி கோரப்பட்டுள்ள குவாரிக்கு, 300 மீட்டரில், 9 வீடுகள் உள்ளன. விதிமுறை மீறலுக்கு ஆதரவாக குவாரியின் மையப்பகுதியில் இருந்து தவறாக அளவீடு செய்யப்படுகிறது. வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., - தாசில்தார் ஆவணங்களை மறைத்தாலும் 'கூகுள்' மறைக்காது. வயநாடு, மியான்மரில் நடந்த சம்பவம் இங்கும் நடக்கும் அபாயம் உள்ளது .


திருஞானசம்பந்தம், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்: சட்ட விதிமுறைகளை பின்பற்றி குவாரிகள் இயங்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். கனிம வளங்கள் கேரளாவுக்கு செல்ல, குப்பைகள் அங்கிருந்து தமிழகம் வருகிறது. தொழிலை காக்க குவாரி உரிமையாளரும், இயற்கையை காக்க நாங்களும் போராடி வருகிறோம். கருத்து சொல்பவர்களை பகை உணர்வுடன் பார்க்க வேண்டாம். விவசாயத்தை அழித்துவிட்டு இங்கு எதையும் சாதிக்க முடியாது.


மனிதாபிமானம்



கருத்துக்கேட்புக்கூட்டத்தில், ஒருபுறம் வாக்குவாதம் நடந்து வர, வெளியே நின்றநபர் ஒருவர், வலிப்பு நோய் காரணமாக கீழே விழுந்ததில் ரத்தம் வெளியேறியது. ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என்பதால், கார் உதவியுடன் பொதுமக்களே மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

Advertisement