விருதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் நகரில் ஜங்ஷன் ரோடு, கடலுார் ரோடு, கடை வீதி, வேப்பூர் ரோடு ஆகியன பிரதான பகுதிகளாகும். வணிக நிறுவனங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளதால் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். இங்கு, சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன நெரிசலுடன், பாதசாரிகளுக்கு விபத்து அபாயம் அதிகரித்தது.

இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கடந்த மாதம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஒரு வாரத்தில் கடைகளின் விளம்பர போர்டுகள், முகப்பு ெஷட்டுகள் தொடர்ந்தன.

இதையடுத்து, விருத்தாசலம் நகராட்சி மற்றும் போலீசார் இணைந்து ஜங்ஷன் ரோடு, கடலுார் ரோடு பகுதிகளில் விளம்பர போர்டுகளை அகற்றி, கடைகளின் முகப்பில் போடப்பட்டிருந்த ெஷட்டுகளை பொக்லைன் மூலம் அகற்றினர். இதற்கு அப்பகுதி வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கியிருந்தால், தாங்களாகவே ெஷட்டுகளை அகற்றியிருப்போம். பகல் 12:00 மணிக்கு மேல், சுட்டெரிக்கும் வெயிலில் ெஷட்டை பிரிக்க முடியாத நிலையில், பொக்லைன் மூலம் சேதப்படுத்தி அகற்றுவது தவறு என கூறினர். இதனால் நோட்டீஸ் வழங்கியதும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் எனக்கூறி அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement