சந்தையில் எஜமானரை தேடி வந்த ஆடு; தன்னை திருடியவரை காட்டிக்கொடுத்தது

7


புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே ஆட்டை திருடி, சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டபோது, அதே சந்தையில் தன் எஜமானரை பார்த்த ஆடு, ஓடிச்சென்று அவரிடம் தஞ்சமடைய, ஆடு திருடிய நபர் ஓட்டம் பிடித்தார். அவரை வியாபாரிகள் சுற்றிவளைத்து பிடித்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குளப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அடைக்கலசாமி, 58. இவரது வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த இரு ஆடுகளை நேற்று முன்தினம் அதிகாலை மர்ம நபர் திருடிச் சென்றார். அப்பகுதியில் ஆடுகளை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.


இந்நிலையில், அவர் வழக்கமாக செல்லும் கறம்பக்குடி அருகே உள்ள தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் சந்தைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றார். அங்கு நுாற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.


அடைக்கலசாமி சந்தையை சுற்றி வந்தபோது, ஒரு ஆடு அதை பிடித்து வைத்திருந்த நபரிடமிருந்து, கயிறை விடுவித்துக் கொண்டு அடைக்கலசாமியை நோக்கி ஓடி வந்தது.


இதைக்கண்டு பரவசமான அடைக்கலசாமி, அந்த ஆட்டை பார்த்தபோது, அது காணாமல் போன தனது ஆடு என்பதை அறிந்தார்.


அதேநபர், காணாமல் போன அடைக்கலசாமியின் மற்றொரு ஆட்டை கையில் பிடித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே அவரை பிடித்து கறம்பக்குடி போலீசில் ஒப்படைத்தார்.


போலீஸ் விசாரணையில், அவர், தஞ்சாவூர் மாவட்டம், தளிகைவிடுதியைச் சேர்ந்த சரத்குமார், 32, என்பதும், தொடர்ந்து ஆடு திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. வளர்த்த பாசத்தில் உரிமையாளரை தேடி ஓடி வந்த ஆடு, தன்னை திருடியவரையும் காட்டிக்கொடுத்து, 'கம்பி' எண்ண வைத்துவிட்டது.

Advertisement