'பயிர்களுக்கான நகைக்கடன் பெறும் விவசாயிகளை பாழாக்காதீங்க'

மதுரை: பயிர்களுக்கான நகைக்கடன் பெறும் விவசாயிகளை மீண்டும் கந்துவட்டிக்காரர்களிடம் அனுப்பும் புதிய நடைமுறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய வேண்டும் என பாரதிய கிசான் சங்கத்தினர் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் நகைக்கடன் பெற்ற பொதுமக்கள், விவசாயிகள் ஓராண்டுக்குள் நகையை மீட்க முடியாவிட்டால் வட்டியை முழுமையாக செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து வந்தனர். தற்போது ஓராண்டுக்குள் அசல், வட்டியை முழுமையாக செலுத்தி நகைகளை மீட்க வேண்டும்; தேவைப்பட்டால் மறுநாள் அடகு வைக்கலாம் என ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது விவசாயிகளை பாதிப்பதால் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவிற்கு பாரதிய கிசான் சங்கம் சார்பில் தேசிய துணைத்தலைவர் பெருமாள் கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் கூறியதாவது: விவசாயிகள் ரூ.3 லட்சம் வரையான பயிர்க்கடனுக்கு கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வந்தோம். பயிர் அறுவடை சேதாரமின்றி கிடைத்து அதை விற்றால் வங்கியில் அடகு வைத்த நகைகளை அதே ஆண்டிலேயே மீட்கிறோம்.

இந்தாண்டு தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றம், நோய் தாக்குதலால் நெல் உட்பட பல்வேறு பயிர்களில் மகசூல் இழப்பு ஏற்பட்டது. சில நேரங்களில் விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்காமல் ஏமாற்றமடைகிறோம். இதுபோன்ற நேரங்களில் வங்கிகளில் வட்டியை மட்டும் செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து வந்தோம். இதனால் மத்திய அரசுக்கோ, வங்கிகளுக்கோ எந்த நஷ்டமும் இல்லை. பொதுமக்களிடம் அடகு நகைகளை பெற்று அதை மொத்தமாக வங்கிகளில் அடகு வைத்து ரூ.பல லட்சம் பெறும் வணிகரீதியான தொழில் செய்வோர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தலாம். ஆனால் விவசாயிகளை நிலைகுலைய வைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த திட்டத்தால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், கந்துவட்டிக்காரர்கள் வங்கிகளின் வாசலிலேயே அமர்ந்திருக்கின்றனர். அவர்களிடம் கந்துவட்டிக்கு கடன் பெற்று நகையை மீட்கிறோம். மறுநாள் வங்கியில் நகையை திரும்பவும் அடகு வைத்து கடன் பெற்று அத்தொகையுடன் கூடுதலாக ஒருநாள் வட்டியாக குறைந்தது ரூ.3000 வரை கந்துவட்டிக்காரர்களுக்கு செலுத்துகிறோம். மீண்டும் கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் செல்ல வேண்டிய கட்டாயத்தை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் ரூ.3 லட்சம் வரை நகைக்கடன் பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகள் சிட்டா, அடங்கலை ஒவ்வொரு முறையும் ஒப்படைக்கிறோம். எனவே விவசாயிகளுக்கான நிபந்தனையை ரிசர்வ் வங்கி தளர்த்த வேண்டும் என்றார்.

இதேபோல சாமானியர்களுக்கும் ரூ.3 லட்சம் வரையான நகைக்கடன்களை ஓராண்டுக்குள் திருப்ப வேண்டும் என்ற உத்தரவை ரிசர்வ் வங்கி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களும் கந்துவட்டிக்காரர்களின் பிடியில் மீண்டும் சிக்கும் அபாயம் உள்ளது.

Advertisement