தி.மு.க., எம்.பி., ராஜாவுக்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம்

மதுரை: நீலகிரியில் தி.மு.க., மாணவரணி கூட்டத்தில் பேசிய எம்.பி.,யும், துணைப் பொதுச்செயலாளருமான ராஜா 'தி.மு.க., வேட்டி கட்டும்போது பொட்டு வைப்பது, கயிறு கட்டுவது போன்ற ஆன்மிக அடையாளங்கள் கூடாது' என்றார். இதற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாவது:

ஹிந்து மதத்தை மீண்டும் இழிவுபடுத்தும் வகையில் ராஜா பேசியுள்ளார். தி.மு.க.,வில் உள்ள ஹிந்துக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தான் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவன் எனக்கூறும் முதல்வர் ஸ்டாலின், இதை ஆதரிக்கிறாரா இல்லையா என தெளிவுபடுத்த வேண்டும். தொடர்ந்து ஹிந்துக்களுக்கு எதிராக பேசி வரும் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரம்ஜானுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர், ஹிந்து பண்டிகைகளுக்கு எப்போதுமே வாழ்த்து சொல்வதில்லை. தி.மு.க., என்றைக்குமே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்பது தெளிவாகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தெரிவித்துள்ளதாவது:

ஹிந்துக்கள் பொட்டு வைக்ககூடாது, கயிறு கட்டக்கூடாதென்று '2ஜி' ஊழல் வழக்கில் சிறை சென்ற ராஜாவுக்கு கருத்து சொல்ல என்ன தகுதி இருக்கிறது. பொட்டு வைத்தவர்கள் கயிறு கட்டியவர்கள் எனக்கோ தி.மு.க.,வுக்கோ ஓட்டளிக்க வேண்டாமென்று அவர் சொல்வாரா. ஹிந்துக்களை மட்டும் ராஜா இழிவுபடுத்தவில்லை. முதல்வர் குடும்பத்தினரையும்தான் இழிவுபடுத்தி உள்ளார். உடனடியாக ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பொட்டு, கயிறை பற்றி தவறாக பேசியதை வாபஸ்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement