வக்ப் திருத்த மசோதா: ராஜ்யசபாவில் 128 எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்றம்

11

புதுடில்லி: வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ராஜ்யசபாவில் நீண்ட விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.


@1brசமூக நலத்திட்டங்களுக்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கும் சொத்துக்களை நிர்வகிக்க வக்ப் வாரியம் அமைக்கப்பட்டது; இதற்கென உருவாக்கப்பட்ட வக்ப் வாரிய சட்ட சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.

இச்சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில் நேற்று முன்தினம் (ஏப்.,2) பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஏற்காததால், மசோதா தாக்கல் ஆனபோது அரசு தரப்பும், எதிர்க்கட்சி எம்பி.,க்களும் காரசாரமாக விவாதம் மேற்கொண்டனர்.

லோக்சபாவில், 12 மணி நேர விவாதத்துக்கு பின், வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான ஓட்டெடுப்பு, நள்ளிரவு 1:00 மணி அளவில் நடந்தது. இறுதியில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.,க்கள் ஓட்டளித்த நிலையில் 232 பேர் எதிர்த்து ஓட்டளித்தனர். இதையடுத்து மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.

இந்நிலையில் நேற்று (ஏப்.03) ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்டது. பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராஜ்யசபாவில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதன் மீது 13 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடைபெற்று. நள்ளிரவு 2 மணியளவில் விவாதம் நிறைவடைந்தது. பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

ராஜ்யசபாவின் தற்போதைய எண்ணிக்கை 236 ஆகும். பெரும்பான்மைக்கு 119 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பா.ஜ., கூட்டணிக்கு (பா.ஜ.,98; ஜேடியூவின் 4; அஜித்பவார் என்சிபி 3; தெலுங்குதேசம் கட்சியின் 2 ) உள்ளிட்ட மொத்தம் 125 எம். பி., க்கள் ஆதரவு உள்ளது.

ஆனால் இந்தியா கூட்டணிக்கு ராஜ்யசபாவில் மொத்தமே 88 எம்பிக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது .இந்நிலையில் . நள்ளிரவு 2:45 மணியளவில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. எதிராக 95 பேர் ஓட்டளித்தனர்.



இண்டி கூட்டணி அல்லாத எதிர்கட்சிகளான, பி.ஆர்.எஸ்., ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் வக்ப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ராஜ்யசபாவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி.,க்கள், மனசாட்சிப்படி ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


தமிழக கட்சிகள் யாருக்கு ஆதரவு?


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வக்ப் மசோவிற்கு ஆதரவாக ஓட்டளித்து உள்ளது. தி.மு.க., கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க., எதிராக ஓட்டளித்துள்ளன. அதேநேரத்தில் பா.ம.க., வெளிநடப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement