ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவை நாகை அருகே அசத்துகிறது அரசு பள்ளி

நாகப்பட்டினம்:நாகப்பட்டினம் அருகே, ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையால், குக்கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, 2017 ம் ஆண்டு முதல் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை தக்க வைத்து அசத்தி வருகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், வலிவலம் அருகே கிள்ளுக்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பள்ளியில் கிள்ளுக்குடி, மாணலூர், சிங்கமங்களம், அய்யடிமங்களம், ஆலத்தம்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 110 மாணவிகள் உட்பட 232 பேர் படித்து வருகின்றனர். பத்தாம் வகுப்பில் 46 மாணவர்கள் படிக்கின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இப்பள்ளி கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து நுாறு சதவீத தேர்ச்சி பெற்று அசத்தி வருகிறார்.
குக்கிராமத்தில் இயங்கிவரும் இப்பள்ளியின் நுாறு சதவீத ரகசியம் குறித்து விசாரிக்கையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவியர்களை, ஒன்பதாம் வகுப்பில் இருந்தே, ஆசிரியர்கள் தயார் படுத்துகின்றனர். மாணவர்களுக்கு காலை, மாலை என, இரு வேலையும் சிறப்பு வகுப்புகள், மாணவ, மாணவியர் சோர்வடையாமல் இருக்க, உணவு மற்றும் மாலை நேரங்களில் சத்துமிக்க உணவு பொருட்கள், தேநீர் உள்ளிட்டவைகளை ஆசிரியர்கள் சொந்த செலவில் வழங்குகின்றனர்.
இரவு 8:30 மணிக்கு சிறப்பு வகுப்பு முடிந்ததும், சுற்றுவட்டார கிராமப்புற மாணவிகள் பாதுகாப்பாக ஆசிரியர்கள் செலவில் ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஏழை விவசாய கூலி தொழிலாளர்கள் என்பதால், ஆரம்ப காலங்களில், பிள்ளைகள் ஒரளவு வளர்ந்ததும் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டு, தன்னுடன் வயல் வேலைக்கு அழைத்து சென்றுவிடுவர். அந்த நிலையை தற்போது ஆசிரியர்கள் மாற்றி, குழந்தைகள் தினமும் பள்ளிக்கு வரும் அளவிற்கு அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். மாணவ மாணவிகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கூட, மருத்துவமனைக்கு அழைத்து செல்வது கூட ஆசிரியர்கள் தான் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.
திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு மற்ற நாட்களில் ஆசிரியர்கள் தமது பணத்தில் உணவு மற்றும் சிற்றுண்டி வழங்குகின்றனர். இப்பள்ளியில் படிப்பவர்களை தமது சொந்த பிள்ளைகளாக ஆசிரியர்கள் பார்ப்பதால், வருகை பதிவேடும் குறைவதில்லை.
இதனால், ஆண்டுதோறும் 100 சதவீத தேர்ச்சி, விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் பதக்கங்கள் என தனியார் பள்ளிகளை வியக்க வைக்கும் அளவிற்கு, கிள்ளுக்குடி கிராம அரசு பள்ளி அசத்தி வருகிறது.
மேலும்
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 204 ரன்கள் இலக்கு
-
டிரம்ப் வரி விதிப்பால் கோடிகளை இழந்த கோடீஸ்வரர்கள்
-
ஆடிட்டரிடம் ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
-
முட்டை கேட்ட பள்ளிச் சிறுவன் மீது துடைப்பத்தால் தாக்குதல்; சத்துணவு பணியாளர்கள் கைது
-
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
-
சக அதிகாரியிடம் 30,000 ரூபாய் லஞ்சம்: முத்திரை ஆய்வாளர் கைது!