சத்துணவு அரிசி விற்பனை பள்ளிகளில் அதிரடி ஆய்வு

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் கிராஸ் ரோட்டை சேர்ந்த இக்பால், 45 என்பவரிடம் இருந்து, நேற்றுமுன்தினம் பள்ளி சத்துணவு அரிசி மற்றும் ரேஷன் அரிசி 210 கிலோவை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் குடிமைப்பொருள் துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், செரங்காட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருந்து சத்துணவு அரிசியை குறைந்த விலைக்கு வாங்கியதாக இக்பால் தெரிவித்தார். இதன் அடிப்படையில், பள்ளி சத்துணவு அமைப்பாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களில் இதுபோன்று தவறுகள் நடந்துள்ளதா என்று குடிமைப்பொருள் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பள்ளி சத்துணவு மையங்களில் அளவுக்கு அதிகமாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதா, இருப்பு பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்று அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ''தவறுகள் நடந்தது தெரிய வந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

Advertisement