'கூட்டுறவு சங்கங்களின் இருப்பு கணக்கு; நிர்வாக அலுவலர்களே சான்றளிக்கலாம்'

திருப்பூர்; தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களில் நிதியாண்டு முடிவில் உள்ள சரக்கு இருப்பு விவரங்கள் கூட்டுறவு தணிக்கை துறை சார்பில் கணக்கெடுக்கப்படும். இந்த ஆவணங்கள் சங்க வரவு -- செலவு கணக்கு சரி பார்ப்பின் போது இருப்பு கணக்கு சரி பார்ப்புக்குப் பயன்படுத்தப்படும்.

நடப்பாண்டில், இதுகுறித்து தணிக்கை துறை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தில், ''கூட்டுறவு சங்க நிர்வாகத் துறை அலுவலர்கள் மூலம் கணக்கு சரிபார்ப்பு மேற்கொண்டால் போதும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, அனைத்து கூட்டுறவு மண்டல இணை பதிவாளர்களுக்கும் பதிவாளர் நந்தகுமார் அனுப்பியுள்ள கடிதத்தில், கூட்டுறவு சங்க இருப்புவிவரங்களை நிர்வாகத்துறை அலுவலர்களே மேற்கொண்டு சான்றளிக்கவும், இந்த சான்று, தணிக்கை துறையின் தணிக்கையின் போது ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

''கூட்டுறவு துறை இருப்பு விவரங்களை சரிபார்க்கும் பணியை நிர்வாகத்துறையினர் மேற்கொள்ளும் போது முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. தணிக்கை துறை இதை ஏன் மேற்கொள்ளாமல் விலகிக் கொள்கிறது என்பதற்கும் உரிய விளக்கம் இல்லை'' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement